சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

🕔 June 11, 2019

– மப்றூக் –

ட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர் சந்தேகித்தனர்.

இதனையடுத்து தாக்குதல் நடந்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த, தற்கொலைதாரியினுடையது எனச் சந்தேகிக்கப்பட்ட தலையை, சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் போலீஸார் முன்னிலையில் ஆசாத்தின் தாயார் லத்தீபா பீவி, ஆசாத்தின் சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் அடையாளம் காட்டிதோடு, அது ஆசாத்தான் என்பதை கடந்த ஏப்ரல் மாதம் உறுதிப்படுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், குறித்த தலை மற்றும் அதற்குரிய உடலின் சில பாகங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு அடையாளம் காட்டப்பட்டது.

இதன் பின்னர், ஆசாத்தினுடையவை எனச் சந்தேகிக்கப்பட்ட உடற் பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளையும், ஆசாத்தின் தாயாருடைய ரத்தத்தையும் மரபணு (டி.என்.ஏ) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதற்கிணங்க மரபணு பரிசோதனையை நடத்திய அரச ரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம், குறித்த தலை மற்றும் உடற் பாகங்கள் ஆசாத்தினுடையவைதான் என்பதை உறுதி செய்து நீதிமன்றுக்கு அறிவித்தது.

இதனையடுத்து, தற்கொலைதாரியான ஆசாத்தின் தலை மற்றும் உடற் பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவு தொடர்பான கடிதம் தனக்கு நேற்று திங்கட்கிழமை கிடைத்ததாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம். உதயகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரை, தான் எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறினார்.

இதேவேளை, மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தல் கடிதம் தனக்கு இன்று செவ்வாய்கிழமை கிடைத்துள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம். தயாபரன் உறுதிப்படுத்தினார். மேலும் இந்த வாரத்துக்குள் குறித்த உடற்பகுதிகளை அடக்கம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய தற்கொலைதாரி ஆசாத், கல்முனையில் திருமணம் முடித்திருந்தார்.ஏப்ரல் மாதம் 26ம் தேதி சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் சஹ்ரான் குழுவினர், தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்த சம்பவத்தில், ஆசாத்தின் மனைவி பைறூஸா என்பவரும் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Comments

புதிது பேஸ்புக் பக்கம்