முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத்
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்தமையின் மிக முக்கியமான தாக்கம், பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் பதவியைத் துறந்த போதும், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்கிற அறிவிப்பினால், பௌத்த பீடங்கள் ‘அகப்பட்டு’க் கொண்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் இந்த விடயங்களை முன்னாள் அமைச்சர் பஷீர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விவவரம் வருமாறு;
‘பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்தவுடன், இலங்கையில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகின.
ஒன்று – மக்கள் வாக்களித்து உருவாக்கும் அரசாங்கமாகும். இது, கடந்த ஏழு தசாப்தத்துக்கும் மேலாக, அனைத்து இன மத மக்களினது வாக்குகளையும் பெற்று அமைக்கப்பட்டாலும், இவ் அரசாங்கங்கள் பௌத்த ஆட்சியையே நடத்தி வந்தன.
ஆகவே இவை பௌத்த அரசாங்கங்கள் என அழைக்கப்படுகின்றன.
மற்றையது, மக்களால் தெரிவு செய்யப்படாத பௌத்த பீடங்களின் அரசாட்சியாகும்.
அந்த வகையில், நாட்டில் பௌத்த அரசாங்கமும், பௌத்த பீடங்களின் அரசாங்கமும் என, இரண்டு உள்ளன.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு – ஜனநாயகத்தின் பெயரால் இயங்கிவந்த அனைத்து அரசாங்கங்களின் தீர்மானங்களிலும், தலையீடு செய்யும் அதிகாரத்தை பௌத்த பீடங்கள் பெற்றுள்ளன.
வரலாற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பௌத்த பீடங்களின் அதிகாரம் தலையீடு செய்த தருணங்களைக் காணலாம்.
மேலும் அங்கீகாரமுள்ள தீர்மானங்களை, தனது வன்முறை மூலம் அழித்த வரலாறும் பௌத்த பீடங்களின் அதிகாரத்துக்கு உள்ளது.
பண்டா- செல்வா ஒப்பந்தத்தை அன்றைய எதிர்க்கட்சியுடன் சேர்ந்து கிழித்தெறிந்தது மட்டுமல்லாமல், அந்த ஒப்பந்தத்துக்குகுக் காரணமாக இருந்த சிங்கள பௌத்த தலைவரான அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவை, பௌத்த பிக்கு ஒருவரே சுட்டுக் கொன்றார்.
அக் காலகட்டத்தில், சிறுபான்மைத் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், அன்றைய அரசாங்கத்துடன் ஓரளவு பேரம் பேசும் நிலையில் இருந்தனர்.
நாட்டில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில், பௌத்த அரசாங்கங்களில் முஸ்லிம்களுக்கு இருந்த பேரம் பேசும் ஆற்றலை, பௌத்தபீடங்கள், கண்டும் காணதது போல பாவனை செய்து, தவிர்க்க முடியாமல் வாழாவிருந்தது.
2009 க்கு பிற்பட்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களுக்குள், முஸ்லிம் மக்களின் பேரம்பேசும் சக்தியை ஒழித்துக்கட்ட, பௌத்தபீடங்கள் கங்கணம் கட்டிச் செயல்பட்டு வந்ததன் விளைவே, கடந்த ஒரு தசாப்தகாலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டு வந்த கசப்பான அனுபவங்களாகும்.
இதன் முற்றிய நிலையை, கடந்த ஏப்பிரல் 21 க்கு பின்னர் காணமுடிகிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்த வரலாற்று நிகழ்வின் மிக முக்கியமான தாக்கம், மேற்குறித்த பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்திருக்கிறது.
உண்மையில் இந்த அமைச்சுப் பதவிகள் துறப்பின் மூலம் கலைந்திருக்க வேண்டியது ஐ.தே.கட்சி அரசாங்கம்தான். ஆனால் அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் என்று, அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்ததன் விளைவாக,தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பௌத்த அரசாங்கம் தப்பிக்கொள்ள, மக்களால் தெரிவு செய்யப்படாத பௌத்த பீடங்களின் ‘அரசாங்கம்’ அகப்பட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காதமையாலும், முஸ்லிம்களின் ஆழும் அதிகாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும், தற்போதைய ஐ.தே.கட்சி அரசாங்கத்துக்கு, பௌத்த பீடங்கள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான காரண காரியங்கள் அற்றுப்போயுள்ளன.
எனவே, அரசாங்கம் மீது பௌத்த பீடங்கள் இப்போது அழுத்தம் பிரயோகிப்பதானால், மலையகத் தமிழரை காரணம் காட்டியே பிரயோகிக்க வேண்டும். ஆனால், இப்போதைய சூழலில் பௌத்த பீடங்களுக்கு அது அவசியமற்றதாகும். மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் மோடி, மலையகத் தமிழர் மீது ‘ஒருவகை’ அக்கறை செலுத்துவதனால், பௌத்த பீடங்கள் தமது காலை, மலையக மக்கள் எனும் கடலில் ஆழமாக விடுவதற்கு தயங்குவதற்கான காரணமாக இருக்கலாம்.
இந்த நிலையில் எதிர்பாராமல், தான் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறும் நோக்கத்தில்தான், அண்மையில் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஞானசார தேரர் ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், அதன் பின்னர் ஊடக மாநாட்டை அவசரமாகக் கூட்டி ரத்ன தேரரை குற்றம் சுமத்த வேண்டிய நிலையும் ஞானசார தேரருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, ரத்ன தேரரின் கோரிக்கையை உடனடியாகக் கவனத்தில் எடுக்குமாறு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தம் கொடுத்து கடுமையான தொனியில் கடிதங்களை எழுதிய பௌத்த பீடங்களின் மகா சங்கத்தினர், இப்போது – பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்புக்களை எடுக்க வேண்டும் என்று அவசரமாக வேண்டுகோள் விடுக்கவும் நேர்ந்துள்ளது.
இந்த நிலையில், பௌத்த பீடங்களால் விரிக்கப்பட்டுள்ள வலையில் முஸ்லிம் தலைவர்கள் வீழ்கிறார்களா, இல்லை விலகிப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது’ என்று தனது பேஸ்புக் குறிப்பில் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமது பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு, நேற்று புதன்கிழமை அனைத்து பௌத்த பீடங்களும் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.