ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள்
தமது அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று, மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்தை அடுத்து, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் சந்தித்து இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் இந்த சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
அஸ்கிரிய மகா பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனையடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட ஸ்ரீ விஜிதசிறி பேசிய போதே, மேற்கண்ட விடயத்தை கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
தற்போதைய அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியிருக்கக் கூடாது.
ராஜிநாமா செய்தவர்களிடம் மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
மேலும், அந்த அரசியல் தலைவர்களுடன் பேசுவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை, அமைச்சுக்களைச் ராஜிநாமா செய்தோர் மீது சில குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறானவர்கள், தாம் குற்றமற்றவர்கள் என்பதை பாதுகாப்பு தரப்புக்கு நிரூபிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
தற்போதைய நிலைமையை நாம் புரிந்து கொள்ளாமல் விட்டால், நாட்டுக்கு வெளியிலிருந்து நிச்சயமாக அழுத்தங்கள் விடுக்கப்படும்.
எமது நாட்டின் அமைதி சீர்குலைக்கப்பட்டு பாரிய அபாயத்தை நாம் எதிர்நோக்க வேண்டியேற்படும்