கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்
கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கு, முதன் முதலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நியமனத்துக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தை அடுத்து, கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தார்.
இதனையடுத்தே, தற்போது கிழக்கு மாகாணத்துக்கு, சிங்களவர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாவுக்கு முன்னர், சிங்களவர்களே கிழக்கு ஆளுநர்களான நியமிக்கப்பட்டு வந்தனர்.
புதிய ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தென் மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.