றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு
“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர். அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது”.
இவ்வாறு, பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதே புலனாய்வு துறையின் பணிப்பாளர் சானி அபேவிக்கிரம ஆகியோர் தன்னிடம் கூறியதாக அமைசச்சர் மனோ கணேசன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது;
“பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரட்ன, அதே புலனாய்வு துறையின் பணிப்பாளர் சானி அபேவிக்கிரம ஆகியோருடன் நான் உரையாடினேன்.
“அமைச்சர் றசாட் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவற்றை நீங்கள் விசாரிக்கவில்லை எனவும் எதிரணியினரும், பல பௌத்த துறவிகளும் கூறுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்டேன்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது இங்கே வந்து எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் – அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் தந்துள்ளவை வெறுமனே புகார் கடிதங்கள் மட்டுமே. அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது. அவற்றில் ஒன்றும் இல்லை.
இங்கே வந்து இப்படியான கடிதங்களை தருபவர்கள், வெளியே போய் ஊடகங்களிடம் வீராவேசமாக கதைக்கிறார்கள்.
ஆனால், இப்படி கதைப்பவர்கள் முதலில், கைது செய்ய, விசாரிக்க உருப்படியான ஆவணங்களைத் தர வேண்டும். எங்களிடம் எதுவும் தரப்படவில்லை. ஆகவே எங்களால் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என, அந்த அதிகாரிகள் கூறினர்.
இதை நான் இன்று (நேற்று திங்கட்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கூறினேன்.
ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள் மீது புகார்களும், சாட்சியங்களும் இருக்குமானால், நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எந்த ஒரு சாட்சியமும் இல்லை என அறிவியுங்கள். இதற்கு ஜூலை முதலாம் திகதி வரை காலக்கெடு வழங்குகின்றேன் என – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என நான் யோசனை கூறியுள்ளேன்.
இதை கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கூறினார்கள். இந்த யோசனையை நான் நாடாளுமன்றத்தில் நாளை (இன்று செவ்வாய்கிழமை) நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் கூற உள்ளேன்” என்றார்.