இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு
🕔 June 3, 2019
– மப்றூக் –
முஸ்லிம்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்து, நெருக்கடிகளையும் இன்னல்களையும் தருவதை இனியும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனும் நிலையில்தான், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த சந்திப்பு அலறி மாளிகைளில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசுகின்றவர்களும் தீவிரவாதத்தைத் தூண்டுகிற மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் இதன்போது ஹக்கீம் கவலை தெரிவித்தார்.
நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்கும் 20 உறுப்பினர்களில் 15 பேர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்;
“முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, இந்த நாடும் அபாயத்துக்குள் தள்ளப்படும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் நாம் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். இந்த நிலையிலும் கூட, நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாததொரு அச்ச சூழல் இருப்பதை நாங்கள் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.
அச்ச சூழல்
உயிர்ந்த ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பிற்பாடு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதற்கான உதவிகளை நாம் முழுமையாக வழங்கி வந்துள்ளோம். அப்படியிருந்தும் கூட, இனவாதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்ற சில சக்திகளின் வெறுப்பு பேச்சுகளுக்கு எந்தவிதத் தடையும் இல்லாமல், அவர்கள் சுதந்திரமாக செயல்படும் ஒரு சூழலைப் பார்த்து நாம் அச்சப்படுகிறோம்.
இந்த அச்ச சூழலில் இருந்து இந்த நாடு மீள வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மக்களிடமும் நல்லிணக்கம் வரவேண்டும். சர்வதேச ரீதியாக இந்த நாட்டுக்கு இருக்கும் நன்மதிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம்.
இதேவேளை, எங்களுக்கு மத்தியில் உள்ளவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும். அதற்கான அவகாசத்தை வழங்குவது எங்களின் பொறுப்பாகும்.
நாங்கள் கூட்டாக இந்த ராஜிநாமாவைச் செய்வதன் மூலம், நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவலங்கள் சம்பந்தமாக இந்த நாட்டின் சகல பாதுகாப்புத் தரப்பினரும், அரசியல் தலைமைகளும், சரியானதொரு புரிந்துணர்வை அடைய வேண்டும் எனவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும்
பயங்கரவாதத்தோடு சம்பந்தமில்லாத பலர் சிறிய விடயங்களுக்காகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.
மக்களுக்கு மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உருவாக்குகின்ற, பிளைவை உருவாக்குகின்ற சக்திகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை எதிர்க்க்கும் தீவிரவாதிகள்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் மட்டும் இங்கு தீவிரவாதம் உள்ளது எனச் சொல்லி விட முடியாது. இன்று அந்தப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசுகின்றவர்களும் தீவிரவாதத்தைத் தூண்டுகிற மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை நடத்துங்கள்
எங்களில் எவருக்கெதிராகவாவது குற்றச்சாட்டுகள் இருந்தால் அது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் உரிய விசாரணைகளை நடத்தி, முடிவுகளுக்கு வரவேண்டும். அந்த முடிவுகளின் பின்பாக யாராவது குற்றவாளிகளாகக் காணப்பட்டால், குறிப்பாக பயங்கரவாதத்துக்குத் துணை போனார்கள் என அடையாளம் காணப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்படுவதில் எந்த தடையுமில்லை.
இனியும் சகிக்க முடியாது
இந்த நாட்டில் சமாதானம் உருவாக வேண்டும். முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படும் நிலைமை மாற வேண்டும். தொடர்ந்தும் எங்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்து, நெருக்கடிகளையும் இன்னல்களையும் தருவதை இனியும் எங்களால் சகிகத்துக் கொண்டிருக்க முடியாது எனும் நிலையில்தான், இது தொடர்பில் சரியானதொரு அழுத்தத்தைக் கொடுக்கும் இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளோம்.
எம்மீதான சந்தேகங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைத் தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருந்தால், குழப்புகின்ற சக்திகளுக்கு நாட்டில் ரத்தக் களரியை உருவாக்குவதற்கான பின்புலம் அமைந்து விடும் என்ற அச்சம் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.
எனவே, அந்த அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
அதுவரையில் பின்வரிசை உறுப்பினர்களாக இருந்து, இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்குப் பாதகம் இல்லாமல், எங்களின் கடமைகளை அரசாங்க உறுப்பினர்களாகச் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
இந்த நிபந்தனைக்கு அமைவாகவே அதைச் செய்வோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.