முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்
– அஷ்ரப் ஏ சமத் –
அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
சிங்களய பலமண்டலய, ஜக்கிய ராச்சியம் மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து விக்டோரியா பார்க் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.
இதன்போது அமைச்சா் ரிசாத் பதியுத்தீன், ஆளுநர்கள் ஆசாத் சாலி, ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
கிழக்கினை அரபு வசந்தமாக்கும் ஹிஸ்புல்லா, காடுகள் வனாந்தரங்களை அழித்து – அரபு நாடுகளின் பெரும் நிதியை இலங்கைக்கு கொண்டு வந்து பாரிய பயங்கரவாதத்தினை உண்டுபண்னுகின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன், இதேபோன்று ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோரை உடனடியாக ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று இதன்போது இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் அங்கு உரையாற்றிய தேரர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.