ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம்

🕔 June 1, 2019

– மப்றூக் –

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இன்று சனிக்கிழமை அடையாள உண்ணா விரதப் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்தவாறு, இவர் தனது உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தான் இந்த உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணா விரதப் போராட்டத்தை தாம் வரவேற்பதாகவும் வியாழேந்திரன் கூறினார்.

“மக்கள் பிரதிநிதி மற்றும் ஆளுநர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக அனுகாமல், அவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு உண்ணா விரதப் போராட்டங்களை நடத்துகின்றமை, சரியான வழிமுறை என நீங்கள் நம்புகின்றீர்களா?” என்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் நாம் வினவினோம்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்; “நாம் பதவி விலக்கக் கோருகின்றவர்களின் கடந்த கால பேச்சுகள், செயற்பாடுகள் அவர்கள் குற்றம் புரிந்துள்ளமையை நிரூபிக்கின்றன. உதாரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பேசிய குரல்பதிவு மற்றும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் அவர் என்ன கூறுகின்றார்? தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கோயில் காணிகளை அபகரித்து, அதில் சந்தைக் கட்டடங்களை நிர்மாணித்ததாக கூறுகின்றார். நீதிபதியை இடமாற்றம் செய்ததாகக் கூறுகின்றார். இவற்றை விடவும், அவரைக் குற்றப்படுத்துவதற்கு வேறென்ன ஆதாரங்கள் தேவை” என்றார்.

அதேபோன்று றிசாட் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி போன்றோர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கேள்வி: அப்படியென்றால், உங்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நீங்கள் பதவி விலக வேண்டுமென எவராவது இப்படி உண்ணா விரதப் போராட்டங்களை ஆரம்பித்தால், நீங்கள் பதவி விலகுவீர்களா?

பதில்: நான் பேச்சளவிலோ, செயற்பாட்டு ரீதியாகவோ எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை. எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை தேடியும் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

கேள்வி: மேற்படி நபர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளை ஏன் சட்டரீதியாக அனுகக் கூடாது?

பதில்: “ஜனநாயக ரீதியாக உண்ணா விரதப் போராட்டமொன்றினை நடத்துவதற்கு எமக்கு உரிமை உள்ளது” என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் போது, பிரதமராக பதியேற்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததோடு, பிரதியமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்