ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல்
🕔 May 30, 2019
– மப்றூக் –
ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு மது வரித் திணைக்களத்தினர் கைது செய்த 08 நபர்களையும், விளக்க மறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மதுவரி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் வழிகாட்டலில், மதுவரி திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர் என். ஸ்ரீகாந்தா, மதுவரி பரிசோதகர் எம். பைரவன், நிசாந்த் தேசப்பரிய, செல்வகுமார், மதுவரி உத்தியோகத்தர்களான குகநேசன், ஏ.ஆர்.எம். கியாஸ், விஜேரத்ன மற்றும் ரமேஷ் ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு பொத்துவில், செங்காமம், அறுகம்பே மற்றும் குண்டுமடு ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையொன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 03 பேரும், கஞ்சா வைத்திருந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றில், மதுவரித் திளைக்கள அதிகாரிகள் ஆஜர் செய்தபோது, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு – மன்று உத்தரவிட்டது.