செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு
– அஹமட் –
அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலகத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கு பிரதேச செயலகத்திலுள்ள சில உத்தியோகத்தர்களும் துணை போவதாகவும் கூறப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் மற்றும், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர், தமக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாவினை குறித்த மத நிறுவனத்துக்காக ஒதுக்கியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மத நிறுவனத்துக்குரிய கட்டிடத்துக்கான அலுமினியம் பொருத்தும் வேலையொன்றை மேற்கொள்வதற்கான அனுமதி கடந்த 16ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மத நிறுவனக் கட்டடத்தில் கடந்த காலத்தில் பொருத்தப்பட்ட அனுமிய வேலையினை புதிதாகச் செய்ததாகக் காட்டி, அதற்கு 10 லட்சம் ரூபாவினை தமக்கு வழங்குமாறு, மத நிறுவனத்தின் நிருவாக சபையினர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளிடம் கடந்த 23ஆம் திகதியன்று கோரியுள்ளனர்.
இதற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள சில அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், சில அதிகாரிகள் பணத்தை வழங்குவதற்குத் துணை போயுள்ளதாகவும் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.