காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லா நேற்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார்.
கடந்த 31.10.2013ம் ஆண்டு 119 பொலிசாரினால் காத்தான்குடிப் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில், பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, புவி . றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டு முன் வராந்தா மதில் சுவரின் அருகிலிருந்து, குறித்த கஞ்சாப்பொதியைக் கைப்பற்றியதாகக் கூறி, காத்தான்குடி பொலிசார் புவி. றஹ்மதுழ்ழாஹ்வைக் கைது செய்து இவ்வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.
இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.
பொலிசார் தமது குற்றச்சாட்டை நீதிமன்றின் சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கத் தவறியதால், சந்தேக நபரை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.
சம்பவம் நடைபெற்ற சமயத்தில், வீட்டில் ஆறு நபர்கள் இருந்த நிலையிலும், சந்தேக நபரை மாத்திரம் பொலிசார் கைது செய்து மன்றில் முன்னிறுத்தியிருந்தனர். இந் நடவடிக்கையானது, தான் ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் அரசியல் பழிவாங்களுக்கான முயற்சியாகும் என்று, ஊடகவியலாளர் புவி. றஹ்மதுழ்ழாஹ், அவருடைய வாக்கு மூலத்தில் கூறியிருந்தமையை நீதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதியை, சந்தேகநபரின் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே பிரித்துக் காண்பித்த பின்னர், உரியமுறையில் பொதி செய்து முத்திரையிடாமல், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து பொதி செய்தமையானது, இடமாற்றத்தில் பொருள் மாற்றமும் இடம்பெற்றிருக்க முடியும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை பழக்கடையொன்றில் தாங்கள் நிறுத்ததாக ஒரு சாட்சியும், புத்தகக் கடையில் நிறுத்ததாக மற்றொரு சாட்சியும் சாட்சியமளித்திருப்பதும், மன்றின் அவதானத்தில் முரண்பாடாக கவனிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதி, இவ்வாறாகத் தொடரப்பட்ட இரண்டு பிரபல வழக்குகளின் தீர்ப்புக்களையும் மேற்கோள்காட்டி இத்தீர்ப்பினை வழங்கினார்.
இதேவேளை, தமது வீட்டில் பொலிசார் தேடுதல் நடாத்தி கஞ்சாப் பொதியைக் கைப்பற்றியதாகக் குற்றஞ்சாட்டியதானது, முன்னாள் பிரதியமைச்சரும், இந்நாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முன்னெடுத்த அரசியல் பழிவாங்கலாகும் என்றும், இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு காத்தான்குடிப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக அச்சமயத்தில் கடமையாற்றிய இன்ஸ்பெக்டர் அஜித் பிரசன்னா உடந்தையாகச் செயற்பட்டு அவரது அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து தன்னையும், தனது குடும்பத்தையும் பெரும் மன உளைச்சலுக்கும், வீண் அலைச்சலுக்கும், அவமானத்திற்கும் உட்படுத்தியதாக ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனித உரிமைகள் ஆர்வலரான ருக்கி பெர்ணான்டோவின் அறிவுறுத்தலுக்கமைய அப்போதே முறைப்பாடு செய்திருந்தார்.
ஆயினும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்ததன் காரணமாக, இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும்வரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தொடர் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
ஆயினும், தற்போது – தான் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் எனவும், தான் நஷ்டஈடு கோரி மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும் புவி. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்தார்.