04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார
🕔 May 24, 2019
– அஸ்ரப் ஏ சமத் –
தௌஹீத்வாதியான வைத்தியர் ஒருவர், 04 ஆயிரம்
கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது, கருத்தடை செய்ததாக திவயின சிங்களப் பத்திரிகையில் வெளியான செய்தி அப்பட்டமானதொரு பொய்யாகும் என்று, ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.
04ஆயிரம் சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, ஒரு வைத்தியா் 50 வருடங்களாவது சேவையில் இருந்திருத்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தச் செய்தி பற்றிய பின்புலத்தினை பொலிஸார் கண்டறிந்து மக்களுக்கு தெரிவுபடுத்தல் வேண்டும் என்று, தான் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
‘இன்னுமொரு இரத்தம் சிந்துதல் வேண்டாம்’ எனும் தலைப்பில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு ஒழுங்குசெய்த நிகழ்வு, இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, இந்த விடயங்களை அவர் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
பணம் உழைக்கும் முஸ்லிம் தலைவர்கள்
“முஸ்லிம் அரசியல் தலைமைகள், தங்களின் அடுத்த பரம்பரையின் தேவைக்கும் அதிகமான பணத்தை, தோ்தல் காலத்தில் முழு மூச்சாகச் சம்பாதித்து வைத்துள்ளனர்.
ஆனால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளிலும், அந்த மக்களின் தேசிய ஒற்றுமையிலும் கரிசனை காட்டவில்லை.
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற மனித படுகொலைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது கொடூரமான காட்டுமிராண்டிச் செயலாகும்.
அதேபோன்றுதான் மே 13ஆம் திகதி முஸ்லிம்களது சொத்துக்களை நாசமாக்கிய சம்பவங்களையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
குருநாகல் மாவட்டம், மினுவான்கொட மற்றும் புத்தளம் சம்பவங்கள், அரசியல் பின்னணியில் ஒழுங்குபடுத்தப்பட்டு செய்து முடித்த சதியாகும்.
தாக்குதலின் பின்னணியில் அரசியல்
ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமுகம் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றாா்கள். இந்த நாட்டில் இனவாதத்தினை முற்படுத்தியே அரசியல் அதிகாரத்திற்கு வருவது வரலாறாக உள்ளது .
கருத்தடை எனும் பொய்க் கதை
இன்றைய (23ஆம் திகதி) திவயின சிங்கள பத்திரிகையில் திட்டமிட்டு பொய்யானதொரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். அச் செய்தியில் தௌஹீத்வாதியான ஒரு முஸ்லிம் வைத்தியா் 04 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசிரியேன் சத்திர சிகிச்சை மேற்கொண்டபோது, கருத்தடை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இச் செய்தி பற்றி உரிய பின்புலத்தினை பொலிசாா் கண்டறிந்து மக்களுக்கு தெரிவுபடுத்தல் வேண்டும் என நாடாளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
04 ஆயிரம் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்வதற்கு ஒரு வைத்தியா் 50 வருடங்களாவது சேவையில் இருந்திருத்தல் வேண்டும். அச் செய்தியில் எந்த வைத்தியசாலை, எந்த வைத்தியர் என்கிற விவரங்கள் என்று குறிப்பிடப்படவில்லை. இது குறித்து யார் முறையிட்டுள்ளாா்கள் என்றும் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
சூடேற்றும் ஊடகங்கள்
இவ்வாறுதான் கடந்த ஒரு மாத காலமாக திட்டமிட்டு சில இனவாத ஊடகங்கள் இந்த நாட்டுக்கு காட்டியது. “இன்னும் பொறுமையாக இருக்கின்றீா்கள், போய் முஸ்லீம் சமூகத்தைத் தாங்குங்கள் , நொறுக்குகங்கள், பற்றவையுங்கள்” என்றே அவா்களது செய்திகள் நாளாந்தம் உசுப்பேற்றிக் கொண்டிருந்தன.
அந்த ஊடகங்களின் தலைமைகள் எதிா்காலத்தில் தோ்தலில் குதிப்பதற்கும் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். செய்திகைளைப் பார்ப்பதற்கு முன்னர், அந்த ஊடகம் யாருடையது? என முதலில் அறிந்து கொண்டு, அவா்களது செய்தியை அவதானியுங்கள். அந்தச் செய்தியில் உண்மைத் தன்மையுள்ளதா? எனப்பாருங்கள்.
இனவாதத்தை வைத்து நடத்தும் அரசியல்
இந்த நாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா், இரண்டு மத அடிப்படைவாதிகளைக் கொண்ட இரு குழுக்களுக்கு அரச சம்பளம் வழங்கியுள்ளா். அவர் எதிா் காலத்தில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட உள்ளதாகவும் ஏப்ரல் 22ஆம் திகதியே ஊடகத்தில் தோன்றி சொன்னார். அவா் பதவிலிருந்தால் இந்த ப் பிரச்சினையை தீர்த்துக் கட்டுவாராம்.
இந்த அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் இனவாதம், மதவாதம் மற்றும் இனங்களுக்கிடையே குரோதங்களை வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு இந்த நாட்டில் இனப் பிரச்சினைகள், யுத்தம் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
1994 – 99களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் யுத்தம் இருந்தது, 2001களில் மத்தியவங்கி, விமானநிலையம், தலதா மாளிகை தாக்குதல்கள் நடந்தன. 2001ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. 2005இல் மீண்டும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். 2009 மே 19ஆம்திகதி யுத்தம் ஓய்ந்தது.
அதன் பிறகு 2015ஆம் ஆண்டு தற்போதைய ஜனதிபதி ஆட்சிக்கு வந்தார். எவர் பதவிக்கு வந்தாலும் இந்த நாட்டு மக்களினை பாதுகாத்தல் வேண்டும். அவா்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குதல் வேண்டும். சமூகங்களுக்கிடையே இனக் குரோதங்களை வளர்க்காமல், தேசிய ஒற்றுமைகளையே வளர்த்தல் வேண்டும்” என்றார்.
இங்கு மதத் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.