தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின
– பாறுக் ஷிஹான் –
தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில் புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில்முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணைகளை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணறு 02 மணித்தியாலங்களாக இறைக்கப்பட்டு, அதிலிருந்து சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் மீட்கப்பட்டன.
நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் கல்முனை நகர மண்டபம் வீதியில் உள்ள சந்தேக நபர் தங்கியிருந்த வீடு, பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உள்ளானதுடன் அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் இத்தேடுதலில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் யாவும் பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்டன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதான இச்சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் நால்வர் அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிந்தவூர் , சாய்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் தற்கொலைதாரிகள் தங்குவதற்கான வீடுகளை இச்சந்தேக நபரே வாடகை அடிப்படையில் பேசிக் கொடுத்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது .