எல்லோரும் ‘முஸ்லிம்’ கடைக்குச் செல்வார்கள்; நான் ‘சிங்கள’ கடைக்கு செல்வேன்: 40 வருடமாக நீளும் சகவாழ்வு
– வஃபா பாறூக் –
கண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும் ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை.
பள்ளிவாசலை தொட்டால் போலிருக்கும் காத்தான்குடி ஹோட்டலுக்குள்ளேயே எல்லோரும் நுளைவார்கள்.
நானோ அதன் எதிரே இருக்கின்ற சிங்கள ஹோட்டலுக்கு போவதையே வழக்கமாக்கியிருந்தேன். இதற்கு வேறோர் தனிப்பட்ட காரணமும் அந்த நாட்களில் இருந்தது. அது இங்கு தேவையற்றது.
பிற்காலத்தில் எனது பிள்ளைகளுடன் பிரயாணம் செய்த போதும் இதே ஹோட்டலுக்கே செல்வேன்,
‘முன்புறம் நம்மவரின் கடையிருக்க இங்கு ஏன் கூட்டிவந்தீர்கள்? இங்குள்ளவை ஹலாலா? இவற்றை உண்ணலாமா? ‘ என்று கேட்டான் எனது மகன்களில் ஒருவன்
முன்னாலுள்ள கடைக்குத்தானே நம்மவர் எல்லோரும் போகிறார்கள், நாமாவது இங்கு வந்தால் இவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்குமல்லவா?
ஹராம், ஹலாலை ஆராயுமளவுக்கு எதை உண்ணப்போகிறோம்?
பிஸ்கட், பழவகைகள் எல்லாக் கடைகளிலும் ஒன்றுதான், அதிலேது வித்தியாசம்?’ என்று மகனுக்கு கூறிக்கொண்டேன்,
ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் இப்படி எனது பிள்ளைகளுக்கு கூறுயது போல்தான் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் எனது தந்தையும் எனக்கு சொல்லித்தந்தார்,
நாளை எனது பேரப்பிள்ளைகளுக்கும் அவர்களின் தகப்பனும் இதையே சொல்லிக்கொடுக்க வேண்டும்,
சகவாழ்வு, இன உறவு என்பதெல்லாம் வெறும் சீசன் சுலோகங்களல்ல.
அதன் முக்கியத்துவம் பரம்பரை பரம்பரையாய் உணர்த்தப்பட வேண்டும்
சின்னச்சின்ன உணர்வுகளால் பெரிய பெரிய இடைவெளிகளை நிரப்பலாம்.
இன்னுமொரு விடயம். அந்த சிங்கள ஹோட்டலுக்கு நாம் சென்றால் கடையின் முதலாளியே நேரடியாக மேசைக்கு வந்து கவனிப்பார், மட்டுமல்ல பரிமாறும் பாத்திரங்களின் சுத்தத்தில் நேரடிக்கவனம் செலுத்துவார்,
தவிரவும், முன் கடையிலிருந்து ஏதாயினும் வாங்கித்தரவா என்றும் கேட்பார். மறுத்துவிட்டு அங்கிருக்கும் சிங்கள பலகாரங்களையே விரும்பி உண்போம்
இவ்வளவுக்கும் நானோ, எனது தந்தையோ, பிள்ளைகளோ நிறைந்த தாடியுடையவர்களாகவே இருந்தோம்,
சகவாழ்வு – சீசன் கோசமல்ல; அது மானசீகமான உறவாடல்.
குறிப்பு: கிழக்கு தேசம் நிறுவுனரான வஃபா பாறூக் கல்முனையை சொந்த இடமாகக் கொண்டவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் அதன் ஸ்தாபகர் அஷ்ரப்புடன் இணைந்து உழைத்தவர். அதற்காக, பொருளாதார ரீதியில் மிக அதிகமாகச் செலவு செய்தவர்.