ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை
– மப்றூக் –
அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.
முன்னதாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை, மேற்படி குழுவினர் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில், ஹெரோயின் விற்பனையாளராகச் செயற்பட்டு வந்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 12.55 கிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
50 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் பொதியொன்று, இப் பிரதேசங்களில் 1000 ரூபாவுக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபர்கள், அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையை அடுத்து, அவர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரப்பட்டது.
கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரனுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கலால் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பொறுப்பாளர் எஸ். தங்கராசா மற்றும் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர் என். ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.
ஹெரோயின் போதைப் பொருளை 02 கிராமுக்கு அதிகமாக வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு, மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளமை குறிப்பிடத்தக்கது.