தொப்பி புரட்டிகள்

🕔 May 18, 2019

– அஹமட் –

லங்கை முஸ்லிம்கள் மீது குரோதங்களை வெளிப்படுத்த முற்படுகின்ற மற்றைய சமூகத்தவர்கள் அதிகமாக பயன்பபடுத்தும் வசை; ‘தொப்பி புரட்டிகள்’ என்பதாகும்.

‘முஸ்லிம்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப மாறிக்கொள்கின்றவர்கள்’ என்பதை ஒரு பழியாகவும் கேவலமாகவும், அவர்களின் கலாசார அடையாளம் ஒன்றின் ஊடாகச் சித்தரிப்பதுதான், ‘தொப்பி புரட்டிகள்’ என்பதன் நோக்கம்.

முஸ்லிம்கள் எப்போதும் தமது வாழ்க்கை முறையை இஸ்லாத்தினூடாக அமைத்துக் கொள்வதற்கே அதிகம் விரும்புகின்றனர். அதனால், சமய அடிப்படையில் அவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப பெரும்பாலும் மாறுகின்றவர்கள் இல்லை. தற்போதைய சூழ்நிலையில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் கூட, அவர்கள் சமயத்தை விட்டுக் கொடுக்காமைதான் என்பதை புரிந்து கொள்தல் வேண்டும்.

எனவே, சயம அடிப்படையில் முஸ்லிம்கள் பெரும்பாலும் ‘தொப்பி புரட்டிகள்’ இல்லை.

ஆனால், தம்மை தகவமைத்துக் கொள்வதில் முஸ்லிம்கள் எப்போதும் புத்திசாலிகள், விவேகமானவர்கள். அதனால்தான் பிரச்சினைகளிலிருந்து அவர்களால் எப்போதும் இலகுவில் தம்மை விடுவித்துக் கொள்ள முடிகிறது.

தகவமைத்தல் என்பது, புற மாற்றங்களைச் சமாளிப்பதற்காக, ஒரு உயிர் தன்னை மாற்றியமைத்துக் கொள்வதாகும்.

எவ்வளவுதான் அடிகள் விழுந்தாலும், அதிலிருந்து முஸ்லிம்களால் குறுகிய காலத்தில் மீண்டெழ முடிவதற்கு இதுவே காரணமாகும்.

முஸ்லிம்களிடமுள்ள இந்தத் தகவமைத்துக் கொள்ளும் தன்மைதான் ‘சிலர்’ கண்களை உறுத்தக் காரணமாகும். அதனால்தான் முஸ்லிம்களை ‘தொப்பி புரட்டிகள்’ என்று அவர்கள் வன்மத்துடன் அழைக்கின்றனர்.

‘தக்கன பிழைக்கும்’ என்பது விஞ்ஞானமாகும். சூழலுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் விலங்குகள்தான் உயிர் வாழும் என்கிறது விஞ்ஞானம். முஸ்லிம்களுக்குள்ள பலமும் அதுதான். அவர்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றவர்கள். அதனால்தான் எத்துணை பெரிய சிக்கல்களிலிருந்தும் அவர்களால் இலகுவில் விடுபடவும், மீண்டெழவும் முடிகிறது.

விட்டுக் கொடுப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் சூழ்நிலைக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளத் தெரியாதவை அனைத்தும், இலகுவில் இல்லாமல் போய்விடும்.

உதாரணமாக, உலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய சமஷ்கிருதம் போன்ற மொழிகள் அழிந்து போவதற்குக் காரணம், அது தன்னைத் தகவமைத்துக் கொள்ளாமையும், நெகிழ்வுத்தன்மை அற்றதாக இருந்ததுமே என்று கூறப்படுகிறது.

நெருக்கடியான கால கட்டங்களில் எவ்வாறு தம்மைத் தகவமைத்துக் கொள்வது என்பதற்கும், விட்டுக் கொடுப்பதன் மூலம் சாதுரியமாக வெற்றி பெறுதல் எப்படி என்பதற்கும், முஹம்மது நபியவர்கள் வாழ்வில் இடம்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் முன்னுதாரணமாக உள்ளது.

தொப்பி புரட்டிகளாக இருப்பதில் முஸ்லிம்கள் வெட்கப்படத் தேவையில்லை.

விவேகமுள்ளவர்களாக இருப்பது, பெருமைக்குரியதல்லவா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்