வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம்
🕔 May 16, 2019
இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளான புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டார்.
புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பெரிதும் பாதிப்படைந்துள்ள கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே, அனுகன, கினியம பகுதிகளுக்கும் நேற்று விஜயம் மேற்கொண்ட காதர் மஸ்தான் அழிவுகளை பார்வையிட்டதுடன் நடந்த துயரமான சம்பவங்களை கேட்டறிந்து கொண்டார்.
வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் தமக்கு ஏற்பட்ட துயரங்களை கண்ணீர் மல்க விளக்கிக் கூறினர்.
தமது பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும் காலத்துக்கு காலம் புனித ரமழானில் காடையர்கள் கட்டவிழ்க்கும் வன்முறைக்கு ஒரு முடிவு காணுமாறும், தமக்கேற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அவர்கள் இதன்போது வேண்டிக்கொண்டனர்.
விடயங்களை வேதனையுடன் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், அனைத்து விஷயங்களையும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாக உறுதியளித்துடன் நஷ்டஈடுகளை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.