மூடர்களின் சுவர்க்கம்
– முகம்மது தம்பி மரைக்கார் –
நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம் என நம்பியவர்களால்;, நரகமாக மாறிப்போய் கிடக்கிறது நமது நாடு.
முஸ்லிம் சமூகத்திலிருந்து புறப்பட்ட ஒரு மூடர் கூட்டத்தின் செயற்பாடு, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவலத்துக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. மறுபுறம், இந்த ‘வெம்மை’யான நிலைவரத்துக்குள் கணிசமானோர் ‘குளிர்’ காய்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கவலையைத் தருகிறது.
நாட்டில் நடந்திருக்கும் பயங்கரவாதச் செயற்பாட்டை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கு ஏற்ப விளங்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனூடாகவே, தங்கள் எதிர்வினைகளையும் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்டவர்கள் அல்லது தங்கள் வாகுக்கேற்ப இஸ்லாத்துக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொள்பவர்கள்தான், இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதுதான் உண்மையாகும். அதனால்தான் ‘இவ்வாறான பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்வோர் இஸ்லாமியர்களே இல்லை’ என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
இன்னொருபுறம், உலக அரசியல் பற்றிய தெளிவுள்ளோருக்கு, இந்த தாக்குதல்களின் பின்னணியிலுள்ள அந்நிய சக்திகளின் கோரமுகத்தைப் புரிந்து கொள்தல் இலகுவாக இருக்கும்.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ். எனும் அமைப்பு நடத்தியதாக அறிவித்துள்ளது. ‘எங்கோ’ அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பதிலடியாக இலங்கையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். ‘தலையில் அரிப்பெடுத்தவன் கால்களைச் சொறிந்து கொண்டான்’ என்பதற்கு ஒப்பானது அந்த அறிவிப்பு.
இலங்கை மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு சஹ்ரான் என்பவனும் அவனின் கும்பலும் ‘கருவி’களாப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத வரை, இதன் பின்னாலுள்ள உலக அரசியலை விளங்கிக் கொள்வது கடினமாகவே இருக்கும்.
இலங்கையில் தமிழர் சமூகத்திலிருந்து ஆயுத இயக்கங்கள் உருவானமையின் பின்னணியில் இந்தியா இருந்தது என்கிற உண்மையினை நாம் எல்லோரும் அறிவோம். தன்னிடம் எப்போதும் உதவிக்காகக் கையேந்தும் நிலையில் இலங்கையை வைத்திருக்க வேண்டுமென்கிற இந்தியாவின் திட்டத்திலிருந்துதான், தமிழர் ஆயுத இயங்கங்கள் தோற்றம் பெற்றன.
பின்னர் ஒரு கட்டத்தில் ‘வளர்த்த கடா’ மார்பில் பாய்ந்ததால், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு, இலங்கை அரசுக்கு இந்தியா உதவியாகவும் இருந்தது.
இப்போது முஸ்லிம் சமூகத்தை வைத்து தங்கள் ஆடு – புலி ஆட்டத்தை ஏதோ ஒரு நாடு இலங்கையில் நடத்தியிருக்கிறது. வெளிநாடு ஒன்றின் உதவியின்றி சஹ்ரான் போன்ற நபர்களைக் கொண்ட ஒரு கும்பலால், இவ்வாறான தாக்குதல்களை நடத்தியிருக்க முடியாது என்று, அரச தரப்பு கூறியிருக்கின்றமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.
வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவருடன், நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, இதன் பின்னணி குறித்த அவரின் பார்வையை இவ்வாறு கூறினார். ‘இலங்கைக்கு வட்டிக்குக் கடன் வழங்கியுள்ள ஏதோவொரு நாடுதான், இந்தத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்’ என்றார் அவர்.
‘நாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்த பிறகு, பொருளாதாரத்தில் இலங்கை வளர்ச்சி காணத் தொடங்கியது. இதன் காரணமாக, தனது வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கான இயலுமையினை இலங்கை பெறத் தொடங்கியது. ஆனால், இலங்கைக்கு வட்டிக்குக் கடன் கொடுத்த நாடுகளுக்கு இந்த நிலைவரம் சந்தோசமாக இருக்க முடியாது. கடனை அடைக்கும் நிலைக்கு இலங்கை வருவதைத் தடுத்து, கடனுக்கான வட்டியை மட்டும் ‘கட்டும்’ நிலையில் இலங்கையை வைத்திருப்பதுதான், கடன் வழங்கிய நாடுகளுக்கு லாபமானதாகும்.
எனவே, இலங்கையில் இவ்வாறானதொரு தாக்குதலை நடத்துவதன் மூலம் இந்த நாட்டின் சுற்றுலாத்துறை, அந்நிய முலீடு உள்ளிட்டவற்றில் நேரடியான வீழ்ச்சியினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பெருத்த அடியை உண்டுபண்ண முடியும் என்பதை கணக்குப் பார்த்து, இந்தக் காரியம் நடந்திருக்கிறது’ என்றார், அந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்.
இது ஒருவகையான ஊகம்தான். ஆனாலும் தட்டிக்கழிக்க முடியாத சாத்தியங்கள் இதில் அதிகம் உள்ளன.
இவ்வாறு, இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலால், உலக நாடுகளில் யாருக்கெல்லாம் நேரடியான நன்மைகள் இருக்கின்றன என்கிற ஒரு பட்டியலைப் போட்டுப் பார்த்தாலேயே, நமக்குரிய ‘விடை’யை ஓரளவாயினும் நெருங்கி விட முடியும்.
இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய கும்பலுடன் தொடர்புடையோர் 150 பேருக்கும் குறைவானவர்கள்தான் என்று ஜனாதிபதியே கூறியிருக்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை நாட்டிலுள்ள கணிசமானோர் அறிவார்கள்.
இருந்தபோதும், சஹ்ரான் கும்பல் நடத்திய அந்தத் தாக்குதல்களுக்கு ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்கிற முத்திரையைக் குத்துவதில் ஏராளமானோர் தீவிரமாக உள்ளனர். முஸ்லிம் சமூகம் மீதிருந்த கசப்பையும் வெறுப்பையும் வெளிப்படையாக கொட்டித் தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக, பலரும் இன்றைய நிலைவரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கவலை தருவதாக உள்ளது.
மறுபுறமாக, சஹ்றான் போன்ற சமய ரீதியிலான கடும்போக்காளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட தர்க்கங்களையும், குழப்பங்களையும் தொடக்கத்திலேயே தணித்து விடுவதற்கு, முஸ்லிம் சமூகத்தினுள் இயங்கும் பொறுப்புக்குரிய அமைப்புக்கள் தவறி விட்டன என்கிற உண்மையினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
உதாரணமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக போன்ற அமைப்புக்கள், இவ்வாறான விவகாரங்களில் உரிய பணியை நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனம் பலரிடமும் உள்ளது.
ஒரு சிறிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவுறுத்தல்களை அவ்வப்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்கி வருகிறது.
இப்போதும் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையில், பள்ளிவாசல்களிலுள்ள ஒலிபெருக்கிகளில் பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சொல்வதை, குறைந்த சத்தத்தில் சொல்லுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. ஆனால், கணிசமான பள்ளிவாசல்கள் இதனை கவனத்தில் எடுக்கவே இல்லை. பாங்கு சொல்வதற்கும் அப்பால் சென்று, பள்ளிவாசலினுள் தொழுகை நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் சத்தமாக ஒலிக்க விடுகின்றனர்.
இந்த நிலையானது, முஸ்லிம்கள் அல்லாதோருக்கு மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. பள்ளிவாசலின் உள்ளே இருக்கின்றவர்களுக்கு தொழுகை நடத்துவதை, ஏன் வெளியில் சத்தமாக ஒலிக்க விட வேண்டும் என்கிற கேள்விக்குரிய அறிவு ரீதியான பதில்கள் இருக்க முடியாது.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் இவ்வாறான ‘கலாசாரம்’ தீவிரமடைந்துள்ளது. இதனை தடுப்பதற்குரிய எந்தவித செயற்பாடுகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஈடுபடவேயில்லை. இது தொடர்பில் உலமா சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவதால் சங்கடத்துக்கு உள்ளாகுவோர் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி, அதனால் கலகங்கள் உருவாகும் போதுதான், மீண்டும் ஓர் அறிக்கையுடன் உலமா சபையினர் – களத்துக்கு வருவார்களா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு முக்கியமான தகவல்களை எட்டச் செய்வதற்கும், நாட்டு முஸ்லிம்களை சமய ரீதியாக அறிவுறுத்துவதற்குமான வாய்ப்பாக, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன்னராக குத்பா (பிரசங்கம்) அமைந்துள்ளது. ஆனால், இவ்வாறான பிரசங்கங்களை மேற்கொள்கொன்றவர்கள் எல்லோரும் அதற்குரிய தகுதிகளையும், தராதரங்களையும் கொண்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியதாகும்.
அரேபிய கலாசாரங்களை இஸ்லாமிய வழிமுறை என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான், இவ்வாறான பிரசங்கங்களை அதிகம் நடத்துகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.
இவ்வாறானவர்கள் நிகழ்த்தும் பிரசங்கங்களினூடாக, இஸ்லாம் பற்றிய சரியான விளக்கம் சாதாரண மக்களைச் சென்றடைய முடியுமா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.
‘வாய்ப்பாட்டு’ ரீதியிலான ஜும்ஆ பிரசங்கங்கள்தான் கணிசமான பள்ளிவாசல்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு நடப்பு, உலகின் சமகால நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டு, அவற்றினூடாக பெற்றுக் கொண்ட சரியான புரிதல்களின் அடிப்படையில் ஜும்ஆ பிரசங்கங்களைச் செய்வோர் மிகவும் குறைவாகும்.
ஆனாலும், இந்த விடயங்களிலெல்லாம் இலங்கை முஸ்லிம்களை சமய ரீதியாக வழிநடத்துவதற்குப் பொறுப்பானவர்கள் என்று கூறிக் கொள்ளும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் கவனமாக நடந்து கொள்வதாகத் தெரியவில்லை.
ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாத்தைச் சார்ந்தோர் இல்லை என்று, ஆதங்கத்திலும் தர்க்க ரீதியாகவும் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் கூறிக் கொண்டாலும், அதனை ஏனைய சமூகங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ‘சஹ்ரானின் கும்பலுக்கு இஸ்லாத்தில் எதுவித பங்கும் கிடையாது’ என்கிற வாதங்கள் மட்டும், 250க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொடுத்த கிறித்தவ மக்களின் வலியையும் கோபத்தையும் அணைத்து விடப்போவதில்லை என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த காத்தான்குடி மண்ணிலிருந்து கிளம்பிய ஒரு முட்டாளின் தலைமையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் தொழுது கொண்டிருந்தோர் மீது, அதே வகையான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது பெருத்த முரணாகும்.
இஸ்லாத்தை அவரவர் விளங்கியபடிக்கு ஆளுக்கொரு ‘கொள்கை’யினை வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு கொள்கையினைக் கொண்டோருக்கும் ஒவ்வொரு பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொண்டு, பிரிந்து கிடந்தமைக்கான பலனைத்தான் ‘வட்டியும் முதலுமாக’ இப்போது முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
பாரம்பரிய இஸ்லாமிய முறைமையினுள் காணப்பட்ட மடமைகளை நீக்குவதற்கு முயற்சித்த தௌஹீத்வாதிகள், தமது கருத்துக்களை உரத்தும் வன்மமாகவும் முன்வைத்தமையின் ‘விளைச்சலை’த்தான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இப்போது ‘அறுத்து’க் கொண்டிருக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.
எனவே, இவற்றினையெல்லாம் கவனத்திற் கொண்டு, சுய பரிசோதனையொன்றினைச் செய்வதற்கு முஸ்லிம் சமூகம் தயாராகுதல் வேண்டும்.
மறுபுறத்தே, ஏனைய சமூகத்தவர்களும் சில ஊடகங்களும், முஸ்லிம்கள் மீது வஞ்சம் தீர்ப்பதற்கு வாய்ப்பானதொரு தருணமாக இப்போதைய நிலைவரத்தைப் பயன்படுத்திக் கொள்வதென்பது போக்கிரித்தனமாகும்.
நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (14 மே 2019)