மினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம்
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இது இவ்வாறிருக்க, மினுவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்.
வீடுகளுக்குள் இருந்த முஸ்லிம்களை வெளியே அழைத்து, அவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கிறார் அந்த ஊடகவியலாளர்.
இதேபோன்று, இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களை தாக்கியும் தீ வைத்தும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், மினுவாங்கொட பிரதேசத்திலும் வன்முறையாளர்களின் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் இறந்துள்ளதாக, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றபோதும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.