காடையர்களின் வாள் வெட்டில், 04 பிள்ளைகளின் தந்தை பலி: கொட்டாரமுல்லயில் சோகம்
– அஹமட் –
முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட இனவன்முறைகளின் போது புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா – கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொட்டாரமுல்ல பகுதிக்கு வந்த பேரினக் காடையர்கள் அங்குள்ள சுமார் 25 வீடுகளைத் தாக்கியுள்ளதோடு, அவற்றில் 02 வீடுகளுக்கு தீயிட்டுள்ளனர்.
இதன்போது 45 வயதுடைய அமீர் என்பவரின் வீட்டை தாக்கிய காடையர்கள், அவரை வாளால் வெட்டியுள்ளதோடு, அவர் மீது அசிட் உள்ளிட்ட ரசாயனப் பொருட்களையும் வீசியுள்ளதாக, அங்குள்ளவர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர்.
தச்சுத் தொழிலாளரான அமீர், 04 பிள்ளைகளின் தந்தையாவார்.
இரவு முழுவதும் படையினர் பார்த்திருக்கும் போதே, இந்தக் காடைத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொட்டாரமுல்ல பகுதியிலுள்ளோர் கூறினர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை ஓரிடத்தில் சேர்த்து, அவற்றுக்கும் காடையர்கள் தீ வைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.