பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல்
– மப்றூக் –
இலங்கையின் குருணாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர் தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல நகரத்தில் இன்று நண்பகல் டயர்களை எரித்த காடையர்கள், அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை கொட்டம்பிட்டிய பகுதிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பபட்டதோடு, அவற்றில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள முஸ்லிம்களின் 10க்கும் மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்களின் சுமார் 15 வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விவரித்தார்.
குறித்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோன்று, அனுக்கண பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வீடுகளை தாக்கிய காடையர்கள், அங்கிருந்த லொறி, கார் உள்ளிட்ட வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
150க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கள்களில் வந்தவர்களே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக, வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர் பிரஸ்தாபித்தார்.
இன்றைய தினம் அஷ்டமுல்ல பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட காடையர்கள், அங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தோரதொட்டுவ மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளிலும் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது நிக்கவரட்டிய நகரிலுள்ள கடையொன்றில் பணியாற்றிய முஸ்லிம் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கூறினார்.
இது இவ்வாறிருக்க, குருணாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை நோன்பு துறக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டதோடு, இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஏதண்டவெல, கரந்திப்பில மற்றும் யாயவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களும் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகின.
மேலும், பிங்கிரிய தேர்தல் தொகுதியிலுள்ள கிண்ணியம பகுதியிலுள்ள 03 பள்ளிவாசல்களை அங்கு வந்த சிங்களவர்கள் நேற்றிரவு தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதேவேளை அங்குள்ள முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பூவல்ல பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றும் தாக்குதலுக்குள்ளாகியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களுக்குள் புகுந்த காடையர்கள் அங்கிருந்த குர்ஆன் பிரதிகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.