கைது செய்யப்பட்டுள்ளோரில் 08 பேர் தற்கொலையாளிகள்: ராணுவத் தளபதி

🕔 May 12, 2019

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களின் படி,  எட்டுப்பேர் தம்மை தற்கொலையாளிகள் அடையாளப்படுத்தியுள்ளனர் என, ராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதலை மேற்கொண்டோர், இந்தியாவில் இருந்தே  அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும்  அவர் கூறியுள்ளார்.

வடக்கு – கிழக்கில் மீண்டும் ராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் ராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தகவல் கிடைத்தது. ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பா என்பதில் எமக்கு கேள்வி இருந்தது. சில இறுக்கமாக கொள்கைகளுடன் அவர்கள் செயற்படுவது மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதேபோல்  பாதுகாப்பு சபையில் இந்த விடயம் குறித்து 13 தடவைகள் பேசப்பட்டதா என்ற எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆனால், பாதுகாப்பு சபையில் இதுவிடயமாக ஆழமாக எதுவும் பேசப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட சகல தரப்பினரதும் பலவீனம் காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இருந்தபோதும் யார்  குற்றவாளி என்பதை என்னால் கூற முடியாது. நான் உட்பட  பாதுகாப்புபடை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் இதில் குற்றவாளிகள்தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன்” என்றார்.

“21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றும், எமக்கு 24 ஆம் திகதிதான் இவற்றை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. எமது புலனாய்வு தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது. சிறந்த சில புலனாய்வு அதிகரிகள் கைதுசெய்யப்பட்டமை, புலனாய்வு செயற்பாடுகள் குறைக்கப்பட்டமை என்பன சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது.

அதேபோல் ராணுவமாக எம்மால் சுயாதீனமாக செயற்பட அதிகாரம் இல்லாமையே இதற்கு காரணம். எனினும் 24 ஆம் திகதியில் இருந்து இதுவரை, ராணுவத்தின் செயற்பாட்டால் தான் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்துள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்