புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு
அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகள் பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததை தொடர்ந்தே சர்ச்சை உருவானது. அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனினும், சமூக ஊடகங்களில் உண்மையை மறைத்து, பொய்யான தகவல்கள் பரவுவதாகவும், தற்போதைய நாட்டு சூழலில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
“இந்த பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள புவக்பிட்டிய அ.த.க பாடசாலை ஆசிரியர்கள், பின்தங்கிய மலையக பாடசாலைகளில் பணியாற்றுவதற்கு நியமனம் பெற்றவர்கள். பாடசாலையின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களின் நியமனம் வழங்கப்பட்டது. அதனால், அவர்களுக்கு ஒருபோதும் இடமாற்றம் வழங்க முடியாது. இதை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் உள்ள சோதனை விதி எலலா இடங்களுக்கும் பொதுவானதாகும். இவர்களால் இங்கு இனி பணியாற்ற முடியாவிட்டால், எமக்கு வேறு ஆசிரியர்கள் தேவை. இது பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் உதயகுமாருக்கும், பாடசாலையின் பாதுகாப்பு நியதிகளை ஆசிரியர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் விதமாக பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி ஹோமாகம வலய கல்விப்பணிப்பாளருக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.
பாடசாலை ஆசிரியர்களுக்கன பொதுவான ஆடை பற்றி அரசாங்கம் இப்போது தீவிரமாக கவனம் செலுத்துகிறது. இது பற்றி செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் உரையாடவுள்ளேன். எனினும், அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் வளாகத்துக்குள் நுழையும்போது, பொறுப்பளிக்கப்பட்டவர்கள் சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை இது கட்டாயமாகும். இதில் எவருக்கும் இடமளிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட புவக்பிட்டிய பாடசாலை ஆசிரியைகள், பெண் பொலிசாரின் சோதனைக்கு இடம்கொடுக்கவில்லை. பொலிஸ் அறிக்கையிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரமிருந்ததாகவும், எனினும் பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பாமல், மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களை அனுமதித்ததாகவும், அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர என்னிடம் தெரிவித்தார்.
எனினும், சமூக வலைத்தளங்களில் பிரச்சனையை திரித்து, வேறுவிதமாக கூறுகிறார்கள். அனைவரும் பொறுப்பாக நடக்க வேண்டியது கட்டாயமானதாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி