சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

🕔 May 11, 2019

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கத்தால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் கடந்த 26ம் தேதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில், சஹ்ரானின் உறவினர்கள் உள்ளடங்கலாக பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த பலர் இறந்த நிலையில், அங்கிருந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை படையினர் காப்பாற்றி சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதேவேளை, சஹ்ரானின் சகோதரி மதனியா என்பவரை, டிஎன்ஏ பரிசோதனைக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறு, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் அண்மையில் நடந்த சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுவெடிப்பில் இறந்து விட்டார்கள் என நம்பப்படுகிறது.

சஹ்ரானின் சொந்த ஊரான காத்தான்குடியில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சஹ்ரானின் சகோதரி மதனியா, அண்மையில் பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கடந்த இரண்டு வருட காலமாக சஹ்ரானுடன் தனக்கு தொடர்புகள் எவையும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மே ஒன்றாம் தேதியன்று, சஹ்ரானின் சகோதரியான 25 வயதாகும் மதனியாவை அவரின் காத்தான்குடி வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். இதன்போது அவரின் வீட்டில் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த பணத்தை மதனியாவுக்கு சஹ்ரான் வழங்கியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் சகோதரி மதனியாவை, டிஎன்ஏ பரிசோனைக்காக தற்போது கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலைத் தரப்பு தெரிவித்தது.

ஏப்ரல் 21ம் தேதியன்று கொழும்பில் அமைந்துள்ள ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தேசிய தௌஹீத் ஜாமஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.

எனவே, சஹ்ரானுடையவை என நம்பப்படும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உடற்பகுதிகளையும், உயிருடன் உள்ள சஹ்ரானின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனா மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகளையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம், ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திப் பலியானவர் சஹ்ரான்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது மகளுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்