மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

🕔 October 5, 2015

Jameel - 01– முன்ஸிப் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்பாக இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசுக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை கட்சியிலிருந்தும், மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதென மு.கா.வின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தீர்மானமொன்றினை எடுத்திருந்தது.

மாகாணசபை உறுப்பினரொருவர் கட்சியிலிருந்து நீக்கப்படும் போது, அந்தக் கட்சி சார்பாக அவர் வகித்து வரும், மாகாணசபை உறுப்பினர் பதவியினையும் குறித்த கட்சியின் கோரிக்கைக்கிணங்க வறிதாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை எதிர்த்தே, கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் வழக்குத் தாக்கல் செய்தார்.

இவ்வாறான வழக்கு, மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன்பாகவே விசாரிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, 02 மாதங்களுக்குள் வழக்கு நிறைவுறுத்தப்படுதல் வேண்டுமெனவும் சட்டம் வலியுறுத்துகின்றது.

அந்தவகையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாலினி குணரத்ன, தீபாலி விஜேசுந்தர மற்றும் எம்.எம்.ஏ. கபூர் ஆகியோர் முன்பாக, இந்த வழக்கு – இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். சுமந்திரன் இவ் வழக்கில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்