பயங்கரவாதத்தின் பக்கம் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட வேண்டாம்: சிங்கள, தமிழ் மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
🕔 May 9, 2019
நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்ட குழுவில் 150க்கும் குறைவான தொகையினரே இருந்துள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
“இந்த நாட்டு முஸ்லிம்களை அந்த சொற்ப தொகையிடம் தள்ளிவிட வேண்டாம் என்று, சிங்கள மற்றும் தமிழ் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நேற்று புதன்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த விடயங்களைக் கூறினார்.
ஏப்ரல் 21ம் தேதி நாட்டில் இடம்பெற்ற தாக்குதல், இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல என்றும், அது சர்வதேசத்துடன் தொடர்புடைய பயங்கரவாதச் செயலாகுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதியன்று குண்டுகளை வெடிக்க வைத்து, பயங்கரவாதிகள் பலியான இடத்தையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்று பார்வையிட்டார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பின்னர் சாய்ந்தமருதுப் பிரதேச முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்து, சமகால நிலைவரம் தொடர்பில் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் இணைந்திருந்தார்.
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் இதன்போது ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
இதன் பின்னர், மட்டக்களப்புக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த சியோன் தேவாலயத்தை பார்வையிட்டதோடு, அதன் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தவிட்டார்.
மேலும், தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் மதகுருமாருக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி இதன்போது தனது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்தார்.