ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி

🕔 May 8, 2019

பாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது, ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டு பாடசாலைக்குள் செல்லக் கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து அவர்களை தடுத்ததாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியைகள் அனைவரும் ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்குச் செல்வது வழமையாகும். ஆயினும், நேற்றைய தினம்; “புடவை அணிந்து வந்தால் மாத்திரமே பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்” என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தங்களை பணி செய்ய விடாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆசிரியைகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக, மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை நேற்று அழைத்த ஆளுநர் ஆஸாத் சாலி, இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

எவ்வாறாயினும், தம்மை அவமதித்த பாடசாலைக்கு, இனி பணியாற்றச் செல்வதில்லை என்று, பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் உறுதிபடத் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட 10 ஆசிரியைகளுக்கும் தனது உத்தரவுக்கிணங்க நேற்றைய தினம், வேறு பாடசாலைகளுக்கு உடனடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாக, ஆளுநர் ஆசாத் சாலி பிபிசி-யிடம் கூறினார்.

“அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மறைப்பதை, அரசாங்கம் தடை செய்வதற்கு முன்னதாகவே, மேல் மாகாணப் பாடசாலைகளில் முகத்தை மறைக்கும் வகையில் யாரும் ஆடை அணிந்து வரக் கூடாது என்று நான் அறிவித்தேன். அந்த வகையில் புர்கா, நிகாப் போன்ற ஆடைகளைத்தான் அணிய முடியாது. ஆனால், புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் முகத்தை வெளிக்காட்டும் வகையில் ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியைகளுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, சாரி (புடவை) அணிந்து வருமாறும் அந்த ஆசிரியைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் ஆசாத் சாலி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் பிபிசி-யிடம் பேசுகையில்; “நடந்த சம்பவத்துக்கும் பாடசாலை அதிபர், பிரதியதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு கிடையாது” என்றார். “பாடசாலையின் நுழைவாயிலுக்கு வெளியில் நின்றிருந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள்கள்தான், இதனுடன் சம்பந்தப்பட்டார்கள்” எனவும் அவர் கூறினார். இவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

மேலும், இந்த பாடசாலைக்குள் நுழைவதற்குத் தடுக்கப்பட்டதை பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்த காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

இந்த ஆசிரியைகளை பாடசாலைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்கதல்களை அடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைவரத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் கலாசாரங்களை ஒழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர், தங்களின் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதன்படி புர்கா ஆடை அணிவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும், ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடைகளை அணிவதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்