சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன

🕔 May 7, 2019

– புதிது செய்தியாளர் அஹமட் –

சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் பணப்பரிசு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளமையானது அநீதியான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் சேனாரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டமைக்காக, கல்முனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன் சேனாரத்ன, பொலிஸ் உத்தியோகத்தர்களான  நிஹால் வீரசிங்க மற்றும் பண்டார ஆகியோருக்கு தலா 05 லட்சம் ரூபா பணப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் நிஹால் வீரசிங்க என்பவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், சாய்ந்தமருதில் குண்டு வெடித்ட தினம் அந்த பிரதேசத்தில் , கல்முனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் தானும் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும், அதன்போது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருக்கின்றமை குறித்து பொதுமக்கள் சிலர் தனக்கு தகவல் வழங்கியதாகவும் சார்ஜன் சேனாரத்ன கூறுகின்றார்.

“அப்போது கடமையில் ஈபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரிலும் நான்தான் சீனியர். எங்களுக்குள், நான்தான் பொறுப்பாகவும் இருந்தேன். சம்பவ தினமன்று நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால், அதற்கு நான்தான் பொறுப்புக் கூறியிருக்க வேண்டும், என்மீதான் அந்தத் தவறுக்கான பழி சுமத்தப்பட்டிருக்கும். ஆனால், அந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தமைக்காக வழங்கப்படும் பதவி உயர்வினை மட்டும் எனக்கு வழங்காமல் விடுவது அநீதியாகும்” என்கிறார் சார்ஜன் சேனாரத்ன.

சம்பவ தினமன்று என்ன நடந்தது என்பதை அவர் மேலும் விவரிக்கின்றார்.

“பொலிவேரியன் வீட்டில் பயங்கரவாதிகள் தங்கியிருக்கின்றமை தொடர்பில் எமக்குத் தகவல் வழங்கிய பொதுமக்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, முதலாவது குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக நாம் சம்பவ இடம் நோக்கி எமது மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். பொலிஸ் உத்தியோகத்தர் நிஹால் வீரசிங்க என்பவர் – மோட்டார் சைக்கிளில் தனியாக வந்திருந்ததால் அவர் எமக்கு முன்பாக சென்றார். நானும் பொலிஸ் உத்தியோகத்தர் பண்டாரவும் நிஹாலை தொடர்ந்து சுமார் 50 மீற்றர் இடைவெளியில் சம்பவ இடத்தை அடைந்தோம்”.

”அப்போது இரண்டாவது குண்டு வெடித்தது. உடனடியாக கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு நான்தான் தகவல் வழங்கினேன். படையினர் வரும் வரை நாங்கள்தான் அங்கு பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினோம். சம்பவ இடத்துக்கு படையினர் வந்த பிறகுதான் மூன்றாவது குண்டு வெடித்தது” என்று கூறும் சார்ஜன் சேனாரத்ன, தங்களை நோக்கி பயங்கரவாதிகள் இரு தடவை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறினார்.

சார்ஜன் சேனாரத்ன அம்பாறை நகரை சொந்த இடமாகக் கொண்டவர். 1989 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்தார். கல்முனை பொலிஸ்  நிலையத்துக்கு கடந்த ஜனவரி மாதம்தான் மாற்றலாகி வந்தார்.

“எனவே, அன்றைய தினம் பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்குவதென்பது அநீதியாகும். மூன்று பொலிஸாருக்கும் பணப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளமையைப் போன்று, மூவருக்குமே பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதுதான் நியாயமாகும். அதிலும், எங்கள் மூவருக்கும் அன்றைய தினம் பொறுப்பாக இருந்த எனக்கு பதவி உயர்வு வழங்கப்படாமையானது, அசாதாரணமானதொரு செயற்பாடு” என்றும், சார்ஜன் சேனாரத்ன கூறுகின்றார்.

தனக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி குறித்து பொலிஸ் திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கும், சார்ஜன் சேனாரத்ன தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று பொதுமக்களுக்கும், தலா 10 லட்சம் ரூபா வீதம் வெகுமதிகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்