ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி
🕔 October 5, 2015
ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுகர்பெர்க் (Mark Zuckerberg) மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் மறுத்துள்ளமையானது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது.
மார்க் ஸுகர்பெர்க் மனைவி ப்ரஸில்லா சான், சீன வம்சாவளிப் பெண் ஆவார். அமெரிக்காவிற்கு அகதியாக இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், அவரை காதலித்து வந்தார். மருத்துவ படிப்பு முடித்த ப்ரஸில்லாவை கடந்த 2013 ஆம் ஆண்டு மார்க் திருமணம் செய்துகொண்டார்.
மூன்று முறை ப்ரஸில்லாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தொன்றில், மனைவியுடன் மார்க் ஸுகர்பெர்க் கலந்துகொண்டார்.
அதே விருந்தில் தனது மனைவியுடன் பங்கேற்ற சீன ஜனாதிபதியிடம், சீன மொழியிலேயே பேசிய மார்க், அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் பெண் குழந்தைக்கு, சீன மொழியில் ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனினும், ‘இது ஒரு மாபெரும் பொறுப்பு’ எனச் சொல்லி, பெயர் எதுவும் வைக்காமலேயே சீன அதிபர் நழுவி சென்றுவிட்டார்.
சீனாவில், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘வெய்போ’ என்ற சமூக வலைத்தளம் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.