பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி
– அஹமட் –
அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது;
குறித்த யுவதி தனது சகோதரனுடன் இன்று வியாழக்கிழமை இரவு மோட்டார் பைக்கில் பயணித்துள்ளார். இதன்போது யுவதி தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும், அவரின் சகோதரர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீதியில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மோட்டார் பைக்கில் பயணித்த குறித்த யுவதி மீது பொல்லால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த யுவதியின் கையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் – யுவதி மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோத்தரை, அந்த இடத்தில் கூடி நின்ற பொதுமக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் யுவதி, தற்போது அக்கைரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, யுவதியைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில், அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தை மற்றும் சகோதரரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.