நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு
– அஹமட் –
முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் தலைமையில் அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை, அட்டாளைச்சேனையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் காரியாலயத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு தற்காலிகத் தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி கூட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்ட நிலையில்; அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான பிரதிநிதித்துவம் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமெனவும், அது -தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று, கடந்த 15 வருடங்களாக வாக்குறுதியளித்து – பின்னர் ஏமாற்ற வந்த மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையை வென்றெடுப்பதற்காகவும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 08 உறுப்பினர்களை மட்டுமே, முஸ்லிம் காங்கிரஸால் வெற்றி கொள்ள முடிந்தது.
இதனையடுத்து, துண்டு குலுக்கல் மூலமாக தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.
நசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கிய பின்னரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸால் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு, வெற்றி கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியிலேயே, மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவிலுள்ள நசீரின் ஆதரவாளர்கள், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நசீருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்பான செய்தி: