தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்
“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து, மேற்படி இருவருக்குமிடையில் பாரிய மோதலை உருவாக்கியுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க – மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே, சஜித் பிரேமதாஸ தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. தேர்தலில் தனது தொகுதியை வெல்லத் தகுதியில்லாதவர்கள் எல்லாம் தலைமைக் கனவு காணக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. எனவே, வேறு எவரும் தலைமைப் பதவிக்கு முயற்சிக்கக் கூடாது. ஒற்றுமை கருதித்தான் பொறுமை காக்கின்றோம். ஆனால், பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது” என்று, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில், ரவி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரவி கருணாநாயக்கவின் மேற்படி கருத்துக்கு, ஐக்கி தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இன்று செவ்வாய்க்கிழமை பதிலடி வழங்கியுள்ளார்.
“வங்கிக் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் வீராய்ப்பு பேசுகின்றனர். அப்பாவை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, லஞ்சம் வாங்கித்தான் அரசியல் செய்யக்கூடாது. மக்கள் – யார் பக்கம் என்பதை விரைவில் நிரூபிப்பார்கள்” என்று சஜித் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கி, கட்சிக்குள் அவரை ஓரம் கட்டும் முயற்சியாகவே, ரவி கருணாநாயக்கவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தினை பலரும் பார்க்கின்றனர்.
தொடர்பான செய்தி: மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு