பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம்

🕔 April 15, 2019

– அஹமட் –

ம்பாறை மாவட்ட மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ள ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனும் செய்தியும், அது குறித்த படங்களும் வெளியானமையினை அடுத்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

ஒரு நூலைக் கட்டிக் கொண்டதை இந்தளவுக்கு பெரியதொரு விடயமாகப் பேச வேண்டுமா என்று சிலரும், இஸ்லாத்துக்கு முரணாக லத்தீப் நடந்து கொண்டார் என்று கணிசமானோரும் கருத்துக்களை  முன்வைத்து வருகின்றன.

அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப் – பிரித் நூல் கட்டிக் கொண்டமை பற்றிய செய்தியனை ‘புதிது’ செய்தித்தளமும் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரித் நூல் கட்டிக் கொள்கின்றமை தொடர்பில் – இஸ்லாம் என்ன கூறுகிறது, என்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துதல் அவசியம் என்பதனால், அது குறித்த விளக்கத்தினை அக்கரைப்பற்றைச்சேர்ந்த மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீட் (ஷரயி) அவர்களிடம் கேட்டோம். அதற்கான இஸ்லாமிய விளக்கத்தினை அவர் வழங்கினார்.

“யாரொருவர் மந்திரிக்கப்பட்ட நூல், தகடு, தாயத்து போன்றவற்றினை கட்டிக் கொள்கின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார் என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.

பௌத்தர்கள், இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமிய ஆலிம்கள் மந்திரித்துத் தருகின்றவற்றினைக் கட்டிக் கொண்டாலும், அது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியமாக அமைந்து விடும்.

எனவே, பிரித் நூல் போன்றவற்றினை முஸ்லிம்கள் கட்டக் கூடாது” என்று, மௌலவி ஹமீட் விளக்கமளித்தார்.

மௌலவி ஹமீட் அவர்களின் குரல் பதிவு


தொடர்பா செய்தி: 
பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’

Comments

புதிது பேஸ்புக் பக்கம்