தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க

🕔 April 13, 2019

டந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் ‘தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி’ தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை கலைகலாசார பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதமவளவாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயங்களை அவர் கூறினார்.

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் தலைவர் எம்.எல்.ஏ. பௌசுல் அமீர் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கானஅறிமுகத்தினை அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் வழங்கியதுடன், தேர்தல் பிராச்சாரத்துக்கான நிதி தொடர்பான கலந்துரையாடலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மேற்கொண்டார்.

“அரசியலே உலகை நிர்வகிப்பதால், அரசியலைப் பற்றிய கல்வித் துறையாகிய அரசியல் விஞ்ஞானமே உலகின் சிறந்த பாடநெறியாக”  தான் கருதுவதாகவும்  மஞ்சுள கஜநாயக்க கூறினார்.

ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாகவும் ஜனாநாயகத் திருவிழாவாகவும் தேர்தல்கள் காணப்படுகிறது என்றும், தேர்தல் தொடர்பாக கற்றுக் கொள்வது பிரஜைகளாகிய எமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில்தேர்தல்கள் தொடர்பான பிரச்சினைகளை விரிவாக கலந்துரையாடிய அவர், தேர்தல் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அதற்கான மாற்றுவழிகள் குறித்தும் பயனுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

“அரசியலின் மீதானமக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதற்கு நடைமுறை அரசியலில் காணப்படும் முறைகேடுகளே காரணம். நகரத்தினையும் கிராமத்தினையும் இணைப்பதற்கான இணைப்புப் பாலமாக தேர்தல் அமைய வேண்டும்” என்று தெரிவித்த அவர்; மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் உள்ள சவால்களையும், நிதி குறைந்தோர் தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டினார்.

18-22  லட்சம் இலங்கை மக்கள், வெளிநாட்டில் வாழ்வதாகவும், அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாமலிருப்பதையும் சுட்டிக் காட்டிய மஞ்சுள, அதற்கான மாற்று வழிகளாக தனிநபர் வாக்குமுறை, தூதவராலயத்தில் வாக்குச் சாவடிகளை அமைத்தல், இலத்திரனியல் வாக்குப் பதிவு, தபால்மூல வாக்குப் பதிவு உள்ளிட்ட முறைகள்  உள்ளமையினையும் விவரித்தார்.

சகலபிரஜைகளும் வாக்களிப்பதற்குரிய வாய்ப்பை நாடாளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதனையும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.

சுமார் ஐந்து லட்சம் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக வாக்களிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது அவர் கருத்துத் தெரிவித்தார்.

பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிதிதொடர்பாகப் பேசுகையில்; 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுக் காட்டியஅவர், இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினையும் முன்வைத்தார்.

இந்தியாவில் வாக்காளருக்கு தாம் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் தொடர்பான விடயங்களை அறியும் உரிமை காணப்படுகின்றது. இலங்கையில் சொத்துக்கள் உடைமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் இவ்வம்சம் காணப்பட்டபோதும், சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதற்காகநிதி முகாமைத்துவப் பொறிமுறை ஒன்றுஉருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இத்தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் பங்களிப்பும் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்