இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை
– மப்றூக், படங்கள்: றிசாத் ஏ காதர் –
இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இதுவரையில் அந்த வீதி நிர்மாணம் நிறைவு செய்யப்படாத காரணத்தினால், சுகாதார அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த வீதியினை நிர்மாணித்து முடிக்க வேண்டிய கால எல்லை நிறைவடைந்த பின்னரும், 05 தடவை கால நீடிப்புச் செய்து, வீதி நிர்மாண ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் பணிகள் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரையில் அந்த நடவடிக்கை நிறைவு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, இந்த வீதியில் வாகனங்கள் பயணிக்கும் போது, மிக அதிகளவில் புழுதி எழுவதாகவும், அதனால் தாங்கள் கடுமையான சுகாதார மற்றும் சுற்றாடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வீதி நிர்மாணத்தின் பொருட்டு பரவப்பட்டுள்ள நொறுக்கப்பட்ட கற்களிலிருந்து எழும் புழுதி காரணமாக, இந்த வீதியை அண்டி வாழும் மக்கள், சுகாதார மற்றும் சுற்றாடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை எழுத்து மூலம் தெரிவித்துள்ளதோடு, அதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதம பொறியியலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும், அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இந்த வீதி நிர்மாண வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக இறக்காமத்தைத் சேர்ந்த கே.எல். சமீம் எனும் பொதுமகனொருவர், தமண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த வீதி நிர்மாணம் தொடர்பான விபரங்களையும் அண்மையில் பெற்றிருந்தார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த வீதிக்கான வேலை வழங்குநராக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளார். இந்த வீதி நிர்மாணத்துக்கான பொறியியலாளராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதம பொறியியலாளர் கடமையாற்றுகின்றார்.
இவ்வாறான நிலையிலேயே, இறக்காமம் பிரதான வீதியின் நிர்மாண வேலைகள் இரண்டு வருடங்களாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இந்த வீதி நிர்மாணத்துக்குரிய வேலை வழங்குநரான கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம். சரத் அபேகுணவர்த்தனவை தொடர்பு கோண்டு பேசிய போது; “சித்திரைப் புது வருடத்தின் பின்னரும், இறக்காமம் வீதி நிர்மாணத்தில் முன்னேற்றம் காணப்படாது விட்டால், அதற்குரிய ஒப்பந்தகாரருடனான ஒப்பந்தத்தை முடிவுறுத்தி விட்டு, வேறு ஒருவருக்கு இந்த வீதி நிர்மாணப் பணியினை வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், இந்த வீதி நிர்மாணம் இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் இனியாவது உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே, இறக்காமம் பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது.