பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’
🕔 April 12, 2019
– அஹமட் –
அம்பாறை கச்சேரியில் மேலதிக மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துக்குள் பாரிய அதிர்வுகளும், விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலாளராக நிந்தவூரில் கடமையாற்றி வந்த லத்தீப், மேலதிக மாவட்ட செயலாளராக அம்பாறை கச்சேரியில் நேற்று முன்தினம் புதன்கிழமை கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது, பௌத்த சமய முறைப்படி ஓதப்பட்ட பிரித் நூலினை – இவர் தனது கைகளில் கட்டிக் கொண்டபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சில படங்கள் வெளியாகி உள்ளன.
அங்கு வருகை தந்திருந்த பௌத்த மதகுருமார் பிரித் நூலை, லத்தீப்பின் கையில் கட்டி விடுகின்றமைபோல் அந்தப்படங்களில் காண முடிகின்றது.
இந்த படங்கள் வெளியாகியமையினை அடுத்து, லத்தீப்யினுடைய இந்த நடவடிக்கை குறித்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
யார் இந்த லத்தீப்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக 2011ஆம் ஆண்டு லத்தீப் கடமையாற்றிய காலப்பகுதியில், மோசடியாக அரச காணியை அபகரித்தமை, சட்டத்துக்கு முரணாக காணிகளை கொள்வனவு செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில், 06 ஏக்கர் 02 றூட் அளவான காணித்துண்டுகளை அரச அதிகாரிகள் சிலர் மோசடியாக அபகரித்திருந்தனர். அவ்வாறு அபகரித்தவர்களில் மேற்படி லத்தீப்பும் ஒருவர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல இடங்களுக்கு அப்போது முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பதவிக்காக இஸ்லாத்தை விட்டுக் கொடுக்கலாமா?
பிரித் நூல் கட்டப்படும் பௌத்த சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முஸ்லிம் ஒருவர், அதனை தனது கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற தேவை கிடையாது. பௌத்த மதகுருக்களும் அதனைக் கட்டிக் கொள்ளுமாறு மாற்று சமயத்தவர்களை வலியுறுத்துவதில்லை. இவ்வாறான நிலையில், ஏன் பிரித் நூலை லத்தீப் கட்டிக் கொண்டார் என்கிற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
‘பதவிக்காக இஸ்லாத்தை லத்தீப் விட்டுக் கொடுத்து விட்டார்’ என்றும், ‘முஸ்லிம்களுக்கு இது வெட்கக் கேடு’ எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக மாவட்ட செயலாளர் லத்தீப்பின் கைகளில் பிரித் நூலை பௌத்த மதகுருமார் கட்டும் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு புகைப்படங்களை, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நபரொருவர் அனுப்பி வைத்துள்ளார். அதனை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம்.
இது தொடர்பில் வாசகர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும்.