‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி
– அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டுள்ளமைமைய ‘புதிது’ செய்தித்தளத்துக்கு மேற்படி மத்திய குழுவின் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித் உறுதிப்படுத்தினார்.
அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் பதவியை வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அந்தப் பதவியிலிருந்து ராஜிமாநா செய்த அல்லது விலக்கப்பட்ட நிலையிலேயே, புதிய தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில், நேற்று முன் தினம் திங்கட்கிழமை; ‘முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்’ எனும் தலைப்பில் செய்தியொன்றினை ‘புதிது’ வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, மேற்படி செய்தி பொய்யானது எனக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் ஊடகப் பிரிவினர் வெளியிட்டதாக ஒரு செய்தி பரவியது.
ஆயினும், குறித்த மறுப்புச் செய்தியானது, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
உறுதி செய்யாமலும், ஆதாரமின்றியும் நாம் செய்திகளை வெளியிடுவதில்லை என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் குறித்து, நாம் வெளியிட்ட மேற்படி செய்தியை ‘பொய்யானது’ எனத் தெரிவித்த தரப்பினர் குறித்து நாம் அலட்டிக் கொள்ளவில்லை.
ஆயினும், நாம் வெளியிட்ட செய்தியின் நம்பகத்தன்மையை ‘புதிது’ செய்தித்தளத்தின் வாசகர்களுக்கு, மேலும் உறுதி செய்யும் பொருட்டு, இது தொடர்பில் எழுதி வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித் என்பவரை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு பேசியது.
“முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவி, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவர் பதவி ஆகியவற்றினை, நாடாளுன்ற உறுப்பினர் நசீர்தான் வகித்து வந்தார். எனவே, மத்திய குழுத் தலைவர் பதவியை – வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று, கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் பெரும்பான்மையானோர் கருத்துத் தெரிவித்தனர். அதற்கிணங்க, மத்திய குழுவின் தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் என்பவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று, செயலாளர் ஹாரித் கூறினார்.
இதேவேளை, அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளமையை, எஸ்.எல்.ஏ. ஹலீமும், ‘புதிது’ செய்தித்தளத்திடம் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பிந்திக் கிடைத்த தகவலுக்கிணங்க, மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் ராஜிநாமா செய்யவில்லை என்றும், மத்திய குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நசீரை தலைவர் பதவியிருந்து நீக்கி விட்டு, ஹலீமை நியமித்ததாகவும் தெரிய வருகிறது.
தொடர்பான செய்தி: மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்