அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி
– மப்றூக் –
‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் வண்டு இனத்தால், அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாக, அங்குள்ள தென்னந்தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘ப்ரொமகொதிகா கொமிஞ்சி’ (Promecotheca cumingi) எனும் உயிரியல் பெயரைக் கொண்ட ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் இந்த வண்டு இனமானது, தென்னை ஓலையில் முட்டைகளை இடுகின்றன. இதன் பின்னர், முட்டையிலிருந்து வெளிவரும் வண்டுகளின் வளர்ச்சிப் பருவங்கள், தென்னோலைகளின் உள் இழையங்களை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றன. இதனால், தென்னோலைகள் முற்று முழுதாகப் பாதிப்படைகளின்றன.
இதன் காரணமாக, தென்னை மரங்களின் உற்பத்திகள் 80 வீதம் வரை வீழ்ச்சியடைகின்றன என்று கூறப்படுகிறது.
சில காலங்களுக்கு முன்னர், இந்த தென்னோலை சுரங்கம் தோண்டி எனும் வண்டினத்தை அழிப்பதற்கு, உயிரியல் கட்டுப்பாட்டு முறைமை பயன்படுத்தப்பட்டது. ‘டிமோக்கியா ஜவானிக்கா’ என்கிற வேறொரு வகைப் பூச்சியினத்தைப் பயன்படுத்தி, ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ வண்டு இனத்தை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ‘டிமோக்கியா ஜவானிக்கா’ எனும் பூச்சிகளை, நோய்த் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான மரங்களில் விடுகின்றபோது, அவை, ஓலைகளிலுள்ள தென்னோலைச் சுரங்கம் தோண்டிகளின் வளர்ச்சிப் பருவங்களை உணவாக உட்கொள்ளும். இதனால், தென்னை மரங்களில் ஏற்படும் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், தற்போது தென்னோலை சுரங்கம் தோண்டியினால் ஏற்படும் நோய்த்தாக்கம் மிக அதிகரித்துக் காணப்படுவதால், உயிரியல் கட்டுப்பாட்டின் மூலம், இந்த நோயினைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தற்போது தென்னோலை சுரங்கம் தோண்டி எனும் வண்டு இனத்தை அழிப்பதற்காக, தெங்கு பயிர்செய்கை அதிகார சபையினர் ‘மொனக்குரடபோஸ்’ என்கின்ற ரசாயனத்தை சிபாரிசு செய்து வழங்கி வருகின்றனர். ஆயினும், விவசாயிகள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் இந்த ரசாயனத்தினை பயன்படுத்தாமையினால், குறித்த நோயினை, முற்றாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று, இப்பிரதேசத்திலுள்ள விவசாயியொருவர் கூறுகின்றார்.
‘அதாவது, ஒரு தென்னந் தோட்டக்காரர், தனது தோட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட மரங்களுக்கு இந்த ரசாயனத்தினை பயன்படுத்தும் போது, அருகிலுள்ள பாதிக்கப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர், அவரின் மரங்களுக்கு இந்த ரசாயனத்தினை பயன்படுத்தாமல் விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். சில நாட்களின் பின்னர், ரசாயனப் பொருள் பிரயோகிக்கப்பட்ட மரங்களில், குறித்த ரசாயனப் பொருளின் வீரியம் குறைவடைகின்றபோது, பக்கத்துத் தோட்ட மரங்களிலுள்ள தேன்னோலைச் சுரங்கம் தோண்டி வண்டுகள், ரசாயனப் பொருள் பிரயோகிக்கப்பட்ட மரங்களை நோக்கி மீண்டும் வருகின்றன. இதனால், நோய் மீண்டும் ஏற்படத் தொடங்குகிறது’ என்று, ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்ட உரிமையாளரொருவர் விளக்கமளித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் நோய் அதிகரித்துக் காணப்படுவதால், தெங்குப் பொருட்களுக்கான விலைகள் மிகவும் உயர்வடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தேங்காய் மற்றும் தென்னை ஓலைகளுக்கு அதிக கிராக்கியும் விலையும் சந்தையில் ஏற்பட்டுள்ளன.
தனது தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் 40 நாட்களுக்கு ஒரு தடவை தேங்காய்களைப் பறித்து வரும் தெங்கு விவசாயியொருவர் கூறுகையில்ளூ ‘முன்னர் ஒரு மரத்தில் 30க்கும் மேற்பட்ட தேங்காய்கள் கிடைத்தன. ஆனால், இந்த நோய்த் தாக்கம் ஏற்பட்ட பின்னர், கணிசமான மரங்களில் தேங்காய்களே கிடைப்பதில்லை’ எனத் தெரிவித்தார்.
தமது தென்னந் தோட்டத்திலிருந்து கிடைக்கும் தேங்காய் மற்றும் ஓலைகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை, தமது குடும்பத்தின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பலர், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் உள்ளனர். தற்போது, தென்னோலை சுரங்கம் தோண்டி வண்டுகளால் ஏற்படும் நோய காரணமாக, மேற்படி தென்னந் தோட்டக்காரர்களின் ஜீவனோபாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த நோய்த்தாக்கம் காரணமாக, ஏராளமான தென்னை மரங்கள் இறந்து விடும் நிலையில் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, தென்னோலை சுரங்கம் தோண்டி எனும் வண்டு இனத்தினால் பெருகிவரும் இந்த நோயினை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு, உரிய தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே, இப்பகுதி தென்னந் தோட்ட உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.