மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்
– அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் சில நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக, உயர் கல்வி அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீமிடம் – தான் சமர்ப்பித்த பெயர் பட்டியலில் உள்ளவர்களை, அமைச்சர் ஹக்கீம் நிராகரித்தமை காரணமாகவே, மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் ராஜிநாமா செய்துள்ளார்.
அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் சில நாட்களுக்கு முன்னர், மு.காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, தான் சமர்ப்பித்த பெயர்ப் பட்டியலை ஹக்கீம் நிராகரித்து விட்ட அதேவேளை, அட்டாளைச்சேனையிலிருந்து வேறு சிலர் வழங்கிய பெயர்ப் பட்டியலை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் நசீர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ரஊப் ஹக்கீம் தன்னை ‘வெட்ட’த் தொடங்கியுள்ளதாகவும் அங்கு குற்றம் சாட்டிய நசீர்; அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் முன்னதாக, அட்டாளைச்சேனையில் கட்சியின் அனைத்து பதவிகளையும் ஒருவரே வகித்து வருகின்றமை குறித்து சிலர் அதிருப்தி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனைக்கான அமைப்பாளர், மற்றும் மத்திய குழுவின் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார்.
நசீரின் ராஜிநாமாவை அடுத்து, மு.காங்கிரஸின் நீண்டகால முக்கியஸ்தரும், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தருமான ஹலீம் என்பவர், மத்திய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறு, மு.கா. தலைவரை வலியுறுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை மத்திய குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், விரைவில் அமைச்சர் ஹக்கீமை சந்திப்தெனவும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.