போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும் ஆங்கில செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இந்த உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்குபற்றியதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
மேற்படி உறுதி மொழியினை எடுக்குமாறு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ‘நாஸி சலூட்’ முறையில் இந்த உறுதிமொழியெடுக்கும் நடைமுறை அமைந்திருந்தமையினால், அதனைத் தவிர்த்துக் கொண்டதாக, அரச பணியாளர்கள் சிலர் தெரிவித்ததாக, மேற்படி ஆங்கில ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.