பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம்
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவர், அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஒரு தொகப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது.
இதனை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு மலசல கூட நிர்மாணத்துக்காக 02 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில் குறித்த நிதி ஒதுக்கீட்டுக்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவர், குறித்த பாடசாலையிடம் ஒரு தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதேவேளை, இந்த அதிகாரி தொடர்பில் மேலும் பல முறைப்பாடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் – அரச செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதியொன்றுக்கான விபரப் பதாகையை அமைப்பதற்காக, இவரிடம் கொந்தராத்துக்காரர்கள் பணம் வழங்கியபோதிலும், அந்தப் பதாகையினை அமைக்காமல், குறித்த பணத்தை இந்த அதிகாரி சுருட்டிக் கொண்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்படி பாடசாலையிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்ட அதிகாரி தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி மற்றும் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். அஸ்லம் ஆகியோருக்கும் புதிது செய்தித்தளம், வாய் மொழி மூலத் தகவலை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிடுவதற்கும் ‘புதிது’ செய்தித்தளம் தயாராக உள்ளது.