மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

🕔 April 2, 2019

–  அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மு.காங்கிரஸின் இறுதி உயர்பீடக் கூட்டம் தொடர்பில் செய்தியொன்றினை நாம் வெளியிட்டிருந்தோம்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பரின் தகவலை அடிப்படையாகக் கொண்டு அந்தச் செய்தியை வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய திட்டத்தின் அடிப்படையில்தான் அந்த உயர் பீடக் கூட்டத்தில் ஹரீஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அறியக் கிடைக்கின்றது.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கேற்ப, அந்த உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இணக்கம் தெரிவிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதனால் கல்முனையில் மு.கா.வுக்கு ஏற்படும் சரிவை – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்று மு.கா. தலைவர் நம்புவதாகவும், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஹரீஸ்தான் தடையாக இருந்தார் என பிரசாரம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு மு.கா. தலைவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால்தான், கடந்த உயர் பீடக் கூட்டத்துக்கு ஹரீஸ் சமூகமளிக்காத நிலையிலும், அவர் பற்றிய குற்றச்சாட்டுகளை பலர் முன்வைத்தனர் என்றும், அதனை கட்சித் தலைவர் ஹக்கீம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் எனவும் தெரியவருகிறது.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் எதிர்ப்பினைக் காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை மு.கா. தலைவர் ஹக்கீம் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் மு.காங்கிரசின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

எனவேதான், கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வரும் ஹரீஸை, கட்சிக்குள் ஓரம்கட்டுவதற்கு மு.கா. தலைமை தயாராகி வருவதாகவும் அறியக் கிடைக்கிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மு.காங்கிரஸுக்குள் ஓர் உடைவு ஏற்படுவதற்கான அதிகபட்ச சாத்தியங்கள் இருப்பதாகவும், முக்கிய பிரமுகர் ஒருவர் ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்