ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில் பாரிய விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேற்படி உயர்பீடத்தில் நடந்த விடயங்கள் குறித்து, சித்தீக் காரியப்பர் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார். அதனை அவ்வாறே வழங்குகிறோம்.
மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் உள்ளக விவகாரங்களை விட சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
கட்சியின் முக்கியஸ்தரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட, சில உயர்பீட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கட்சியின் முக்கியஸ்தர்களான சாய்ந்தமருது பிர்தௌஸ், நிந்தவூர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சாய்ந்தமருதுவில் தாங்கள் முகங்கொண்ட விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை விபரித்து கவலையை வெளியிட்டனர்.
இருப்பினும், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்க வேண்டும் என்ற விடயத்தில், உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் காணப்பட்டனர். அதனை வழங்க வேண்டும் என்பதில் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகக் கரிசனையுடன் காணப்பட்டனர்.
ஆனால், கட்சியின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தனிகுனிந்த நிலையில் மௌனியாகக் காணப்பட்டார் எனத் தெரிகிறது.
சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தங்களால் அங்கு அரசியல் செய்யவும் முடியாது என்று, பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கு மேலதிகமாக ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயற்பாடுகளை, சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கட்சிப் பணிகளை அவர் சரியாக முன்னெடுப்பதில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை அவர் வலுப்படுத்துவதில்லை. மாறாக, ‘மெஸ்ரோ’ அமைப்பைப் பலப்படுத்தி அதன் மூலம் தனது இருப்பைத் தக்க வைக்க முயற்சிக்கிறார்.
ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் கொண்டிருந்தால், கட்சி தனித்து விடப்படும் என்ற அடிப்படையில் அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அனைத்து விடயங்களையும் மிகக் கரிசனையுடன் கேட்டவராக; ‘சாய்ந்தமருது விவகாரத்தை தொடர்ச்சியாக இதே நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற வேண்டும்” என்ற அடிப்படையில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.