புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’
நிந்தவூரில் இயங்கி வரும் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலை குறித்து, வெளியான செய்தி தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளத்தை நடத்துகின்றவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மற்றும் பேஸ்புக் ஊடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்காக, பொறுப்புள்ள ஓர் ஊடகமாக குரல் கொடுக்கும் போது, இவ்வாறான நரிகளின் கூச்சல்கள் எழுகின்றமை வழமையானதாகும். மேலும் இவை நமக்கு பழக்கப்பட்டதுமாகும்.
தமது தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களை பண பலம், அதிகாரம் ஆகியவற்றினைக் கொண்டு அடக்கி விடலாம் என, சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்குப் போடுவார்களாயின், அது இறுதியில் அவர்களுக்கு மேலும் சேதங்களையும், அவமானங்களையுமே ஈட்டித் தரும் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை குறித்து, நாம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்படும் மாணவியின் தந்தையை, அந்தப் பாடசாலையின் நிறுவுனர் மற்றும் அவரின் உறவினர்கள் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாட்டை கைவிடுமாறு கோரியதாகவும், அதற்கு உரிய மாணவியின் தந்தை மறுப்புத் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.
இதனையடுத்தே, ‘புதிது’ செய்தித்தளத்தை மிரட்டி அச்சுறுத்தும் கோதாவில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இறங்கியுள்ளனர்.
தொடர்பான செய்தி: பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு