ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா
எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள், ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் பெறப்பட்டு, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு வழங்கும் வைபவம் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஆளுநர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
“மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படவேண்டும், எந்தக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடாது.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, 18 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் கடமையை, அரச அதிகாரிகளிடம் முழுமையாக ஒப்படைக்க முடியாது.
யுத்தம் இல்லாத, அமைதியான சூழ்நிலையில் தேர்தல் வைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளபோதும், தேர்தலை நடத்தாமல் கிழக்கு மாகாண சபையை, இவ்வாறு கொண்டு செல்வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதியும் நாங்களும் பல தடவை கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
தேர்தலை நடத்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது தாமதப்படுவதனால்தான் தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆயினும் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.