ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது
🕔 March 22, 2019
– மப்றூக் –
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுர குணவர்த்தன உறுதிப்படுத்தினார்.
இதன் காரணமாக, புத்தளம் நகர சபை மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என திட்டமிடப்பட்டிருந்தும், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.
கொழும்பு மாவட்டத்திலுள்ள குப்பைகளை, சுமார் 150 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புத்தளம் – அறுவைக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கான, அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ‘க்ளீன் புத்தளம்’ எனும் அமைப்பின் தலைமையில் கடந்த 200 நாட்களாக புத்தளம் பிரதேசத்தில் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய தினம் புத்தளம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு, அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்திருந்தார்.
இதன்போது புத்தளம் – அறுவைக்காடு பகுதியில் குப்பை கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, கறுப்புக்கொடி மற்றும் பதாதைகள் ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்காக புத்தளம் பொலிஸார் நீதிமன்றில் ஆணையொன்றினைப் பெற்றிருந்த போதும், அதையும் மீறி, எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
”இன்றைய தினம் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில்தான், எமது எதிர்ப்பினை நாம் வெளிக்காட்டினோம். ஆயினும், பெண்கள் உட்பட பலர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினார்கள்” என்று, ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பின் செயற்பாட்டாளர் எச். அஜ்மல் தெரிவித்தார்.
“ஜனாதிபதி இன்று புத்தளம் சக்தி மைத்தானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது, அவருடன் பேசுவதற்கு நேரம் பெற்றுத் தருவதாக, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் எமக்கு வாக்குறுதியளித்து, எம்மில் ஐந்து பேரை வருமாறு அழைத்தார். அதற்கிணங்க, நாம் அங்கு சென்றிருந்தோம். ஆனாலும், எம்முடன் பேசாமலேயே ஜனாதிபதி சென்று விட்டார்” என்றும் ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பின் செயற்பாட்டாளர் அஜ்மல் கூறினார்.
கடந்த செவ்வாய்கிழமை புத்தளத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பினரும் பொதுமக்களும், அங்குள்ள காலிமுகத் திடலில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது “கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் பிரதேசத்திலுள்ள அறுவைக்காடு பகுதியில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை நிறுத்தும் முடிவை வழங்காமல், வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதை பரிசீலிக்க வேண்டி ஏற்படும்” என்று, அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எச்சரிக்கை விடுத்தமை நினைவுகொள்ளத்தக்கது.
புத்தளம் – அறுவைக்காடு பகுதியில், கொழும்பு மாவட்டக் குப்பைகைளக் கொட்டும் திட்டத்துக்கிணங்க, நாளொன்றுக்கு 26கொள்கலன்களில் குப்பைகள் கொண்டு செல்லப்படும். இதற்காக, 04 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கொழும்பிலிருந்து குப்பையினைக் கொண்டு செல்லும் போக்குவரத்துக்காக மட்டும் வருடத்திற்கு 1492 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள குப்பைகளை புத்தளத்தில் கொண்டு வந்து கொட்டும் திட்டத்துக்காக, 7600 மில்லியன் ரூபாவினை இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்காக, இந்தப் பகுதியில் சுண்ணக்கற்கள் அகழ்தெடுக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகளை மூடுவதற்காகவே, கொழும்பிலுள்ள குப்பைகள், இங்கு கொண்டு வந்து கொட்டப்படவுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி சுண்ணக்கற்களை அகழ்தெடுக்கும் பணியினை தனியார் நிறுவனமொன்று பொறுப்பேற்றுச் செய்து வருகின்றது.
இந்த நிலையில், புத்தளம் – அறுவைக்காட்டில் கொழும்பிலுள்ள குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்குப் பின்னால், ‘பிஸ்னஸ் மாபியாக்கள்’ உள்ளனர் எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் றிசாட் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அறுவாக்காடு குப்பைத் திட்டத்துக்கு புத்தளம் மாவட்டத்திலுள்ள சர்வ மதத் தலைவர்கள் மற்றும் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இதற்குப் பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் பிடிவாதமாக உள்ளனர்.