குடும்பத் தேர்தல்

🕔 October 2, 2015

Article - 20
ட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில் மூன்று வகையான அதிகார மட்டங்கள் உள்ளன. அந்த வகையில், உள்ளுராட்சி என்பது நாட்டிலுள்ள மூன்றாவது நிலையிலுள்ள அடிமட்ட ஆட்சி முறையாகும். அடுத்த தேர்தல், உள்ளுராட்சித் தேர்தலாகவே அமையவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை நினைவு கொள்ளத்தக்கது.

நாட்டில் மொத்தமாக 335 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 23 மாநகர சபைகளும், 41 உள்ளுராட்சி சபைகளும், 271 பிரதேச சபைகளும் அடங்குகின்றன. தென் மாகாணத்தில் 48 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. நாட்டில் அதிகளவான உள்ளுராட்சி சபைகளைக் கொண்டது தென் மாகாணம்தான். அதற்கடுத்து கிழக்கு மாகாணம் வருகிறது. இங்கு 45 உள்ளுராட்சி சபைகள் இருக்கின்றன.

கடந்த மே 15 ஆம் திகதி 234 உள்ளுராட்சி சபைகள் கலைக்கட்பட்டன. இதற்கு முன்பாகவும் சில உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அந்தவகையில், எஞ்சியுள்ள சபைகளின் ஆட்சிக்காலமும் நிறைவடைந்த பின்னர் அவற்றினையும் கலைத்து விட்டு, நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மக்களுடன் நேரடியாகவும், கீழ் மட்டத்திலிருந்தும் தொடர்புபடுபவை உள்ளுராட்சி சபைகளாகும். சமூகத்துக்குத் தேவையான வசதிகளையும், சௌகரியங்களையும் ஏற்படுத்திக் கொடுப்துதான் உள்ளுராட்சி சபைகளின் அடிப்படைக் கடமைகளாகும்.
வீதிகள், வடிகான்கள், பூங்காக்கள் மற்றும் வாசிகசாலைகளை அமைத்தல் மற்றும் அவற்றினை நிருவாகம் செய்தல், திண்மக் கழிவுகளை அகற்றுதல், குடிநீர் விநியோகித்தல், தெரு மின் விளக்குகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்று, மக்களின் அடிப்படைத் தேவைகளில் அதிகமானவற்றினை உள்ளுராட்சி சபைகளே நிறைவு செய்ய வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இவற்றையெல்லாம் நமது உள்ளுராட்சி சபைகளில் அதிகமானவை வெறும் கண்துடைப்புக்களாகவே செய்கின்றன – செய்து வந்தன.

கணிசமான உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கொந்தராத்துக்காரர்களாகச் செயற்பட்டமையினை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம். உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தின் கீழ் வரும், வீதிகளை அமைப்பதற்கான கொந்தராத்துக்களை, அந்த சபைகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் ‘பினாமி’களின் (பதிலாள்) பெயரில் பெற்றுக் கொண்டமையினையும், அதன் மூலம் பெருமளவான பணத்தினை சுருட்டி எடுத்ததையும் நாம் அறிவோம்.

இவ்வாறான சமயங்களில், குறித்த வீதிகள் மிகவும் தரக்குறைவாக நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், இவை தட்டிக் கேட்கப்படுவதில்லை. காரணம், இவ் விவகாரத்தில், பிழைகளைக் கண்டறிய வேண்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர்களும், உறுப்பினர்களுமே – கொந்தராத்துக்காரர்களாக மாறி, மோசடி செய்யும் போது – யார், யாரைத் தட்டிக் கேட்பது.

ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் இதற்கு ஆயிரத்தெட்டு உதாரணங்களை, ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட முடியும். அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், சில காலங்களுக்கு முன்னர் பாலமுனை பிரதேசத்தில் சிறுவர் பொழுது போக்குப் பூங்காவொன்று அமைக்கப்பட்டது. இதற்கு அரச சார்பற்ற நிறுவனமொன்று பல லட்சங்களை நிதியாக வழங்கியது. குறித்த சிறுவர் பொழுது போக்கு பூங்காவினை அமைப்பதற்கான கொந்தராத்தினை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அப்போதைய தவிசாளரும், உதவித் தவிசாளரும் பினாமிகளை வைத்து எடுத்துக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்ட நிதியில் கால்வாசியைக் கூட, அந்த பூங்காவை அமைப்பதற்கு செலவிட்டிருக்க மாட்டார்கள். மிகுதிப் பணத்தைச் சுருட்டிக் கொண்டார்கள்.

இதே பிரதேச சபையினால், அட்டாளைச்சேனை – பாலமுனை எல்லையிலுள்ள பிரதான வீதியில் மின் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றில் சூரிய ஒளியிலிருந்து சக்கியைப் பெற்று ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதற்காக பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டதாக ஆவணங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விளக்குகள் பொருத்தப்பட்டு சில நாட்கள் மட்டும் எரிந்தன. பிறகு ஒளிரவேயில்லை. பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த விளக்குகள் 02 வருடங்களுக்கும் மேலாக ஒளிராமலேயே இருக்கின்றன. கவனிப்பார் யாருமில்லை.

இவையெல்லாம் சோளப் பொரிகள் போன்ற மிகச் சிறிய உதாரணங்கள்தான். ஆனால், இவர்கள் செய்த யானையளவான மோசடிகளும் உள்ளன. பெரும்பாலான உள்ளுராட்சி சபையில் நிலைமை இதுதான்.

இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் என்பதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமென்கிற தேவையில்லை. இப்படியானவர்களைத்தான், உள்ளுராட்சி சபைகளுக்கு தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் நாம் தெரிவு செய்து அனுப்பி வைத்திருக்கிறோம். கொஞ்சம் பணத்துடனும், பகட்டுடனும், சண்டித்தனத்துடனும் வருகின்றவர்களுக்கு நாம் வாக்களித்துத் தொலைத்து விடுகின்றோம். நமது மடத்தனமாக தெரிவினால், குறிப்பிட்ட நபர் உள்ளுராட்சி சபைக்குச் சென்று விடுகிறார். பிறகு மாகாணசபை செல்கிறார். அதன் பிறகு நாடாளுமன்றம். ஒரு கட்டத்தில், நாம் தெரிவு செய்த நபர் – பிழையானவர் என்பதை நாம் உணர்ந்து கொண்டு, அந்த நபரை அரசியலிருந்து ஜனநாயக வழிமுறையில் வீழ்த்தலாமென நினைத்தாலும் முடியாமல் போய் விடும். காரணம், அவர் அரசியலில் பலம் பொருந்திய நபராக மாறிப் போயிருப்பார். நாம் விதைபோட்டு வளர்த்த மரத்தினையே, நம்மால் பிடுங்கியெறிய முடியாமல் போய்விடும்.

இன்று அரசியலில் இருக்கின்ற அதிகமான மோசடிக்காரர்கள், உள்ளுராட்சி சபைகளினூடாகவே தமது பயணத்தை ஆரம்பித்தவர்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோலவே, நல்ல அரசியல் தலைவர்கள் பலரின் நுழை வாயிலாகவும் உள்ளுராட்சி சபைகள் இருந்திருக்கின்றன என்பதும் உண்மைதான்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்று கிராமப் பகுதிகளில் சொல்வார்கள். காரணம், இந்தத் தேர்தலில் போட்டியிடும் நபர்களின் பண்பு மற்றும் நடத்தைகள் எப்படி, விடயதானமுள்ளவரா என்றெல்லாம் நம்மில் அதிகமானோர் பார்ப்பதில்லை. ஆசாமி நமது சொந்தக்காரரா, நமது குடும்பத்து ஆளா என்று மட்டுமே பார்க்கிறோம். ஆமென்றால் புள்ளடிதான்.

இன்னொருபுறம், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எவ்வகையில் நடத்தப்படும் என்கிற குழப்பமான நிலையொன்று இருந்தது. 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 1981 ஆம் ஆண்டுக்கு முன்பாக, வட்டார அடிப்படையில்தான் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடந்தன.

இந்த நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை மீண்டும் வட்டார முறையில் நடத்துவதற்கு கடந்த ஆட்சியாளர்கள் தீர்மானித்து, அதற்காக எல்லைகளை நிர்ணயப்படுத்தும் நடவடிக்கைகளையும் செய்திருந்தார்கள். ஆயினும் தற்போது, ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறைமையின் அடிப்படையில்தான் எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை வட்டார முறையின் கீழ் நடத்தினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அது – சாதமாக அமைந்து விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, அண்மையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. அப்போதைய மஹிந்த ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமான முறையில் வட்டாரங்களைப் பிரித்து, எல்லைகளை நிர்ணயித்து வைத்துள்ளமைதான் இதற்குக் காரணமாகும் என்றும் மு.கா. தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, சு.கட்சிக்கு சாதகமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விகிதாசார முறைமையின் அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, தற்போதைய ஐ.தே.கட்சி அரசாங்கம் இணங்காது. ஆதனால்தான், எதிர்வரும் தேர்தலை விகிதாரசார அடிப்படையில் நடத்தி விட்டு, அதற்குப் பின்னர் வரும் தேர்தலை வட்டார முறையின் கீழ் நடத்தலாம் என்கின்றனர் ஐ.தே.கட்சியினர்.

இதேவேளை, விகிதாசார தேர்தலின் கீழுள்ள விருப்பு வாக்கு முறைமை தீங்கானது என்றும், அதனை நீக்கி விட்டு, வட்டாரத் தேர்தலின் அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வட்டார தேர்தல் முறைமையின் கீழ், அதிக உறுப்பினர்களை ஒரு கட்சி பெறும்போது, அந்த உறுப்பினர்களிலிருந்து எவரை, குறித்த உள்ளுராட்சி சபையின் தலைவராக நியமிப்பது என்பதைத் தீர்மானிக்கின்ற முழுமையான அதிகாரம், கட்சித் தலைவர்களின் கைகளுக்குச் சென்று விடக்கூடிய ஆபத்துக்கள் உள்ளமையினையும் மறந்து விடக்கூடாது. பிறகு, தலைவர்களின் அல்லக்கைகளாக இருந்தால்தான், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களாகலாம் என்கிற நிலைவரம் உருவாகி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக, விகிதாசார முறைமையிலிருந்து வட்டார முறைமைக்குக்கு மாறி, உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதென்பது, சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

பொது மக்களோடு நேரடியாகவும், அடிமட்டத்திலிருந்தும் தொடர்புபடும் உள்ளுர் ஆட்சி முறைமை குறித்து நம்மில் ஏராளமானோர் அலட்சிக் கொள்வதில்லை. காரணம், அதன் பெறுமானம் பலருக்குத் தெரியாது. உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுகின்ற ஆசாமிகளில் அதிகமானவர்களுக்கும், தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சபைகள் குறித்த போதிய அறிவில்லை. ஊருக்குள் குப்பைகள் அகற்றப்படாமல் நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், குடிநீருக்காக மக்கள் அலையும் பரிதாபகரமான சூழ்நிலையில், அந்த பிரதேசத்தின் உள்ளுராட்சி சபைக் கூட்டத்தில் உரையாற்றும் உறுப்பினர் ஒருவர், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சவால் விடுத்துக் கொண்டிருப்பதென்பது எவ்வளவு பெரிய கோமாளித்தனமாகும். உள்ளுராட்சி சபைக் கூட்டங்களில் உறுப்பினர்கள் இப்படி அமெரிக்காவுக்கு சவால் விடுத்துப் பேசிய கதைகளெல்லாம் ஏராளமுள்ளன.

உள்ளுராட்சி சபை என்றால் என்ன, அதன் அதிகாரங்கள் எவை, அதன் மூலம் நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகள் என்ன என்பது பற்றிய அறிவு இல்லாதவர்களையும், அவ்வாறான அறிவினைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களையும், நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து விட்டு, பின்னர் இதற்கான பழியினையும், பாவத்தினையும் போடுவதற்கு வேறு தலைகளை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களில் கணிசமான உள்ளுராட்சி சபைகள், சண்டைக் காட்சிகள் அரங்கேறும் இடங்களாக மாறியிருந்ததை தொலைக்காட்சிகளில் காணக்கூடியதாக இருந்தன. நற்பண்பு, நாகரீகமற்ற சண்டியர்களை நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தமையின் – பின் விளைவுகளே அவையாகும்.

உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கும் கனவுகளுடன் இப்போதே பலர் அரசியல் அரங்குகளில் தலைகாட்டத் துவங்கியுள்ளனர். இவர்களில் அநேகரிடம் ‘காசு இருக்கிறது’ என்பதைத் தவிர, வேறு தகைமைகள் எவையுமில்லை. உண்மையில், ‘காசு இருக்கிறது’ என்பது – ஒரு வேட்பாளருக்குரிய தகைமையே இல்லை. ஆனால், அது ஒரு தகைமையாக மாறியிருக்கிறது. அதை ஏற்படுத்தியவர்கள் வாக்காளர்களாகிய நாங்கள்தான். ஆக, அதை மாற்ற வேண்டிய பொறுப்பும் நம்மிடம்தான் உள்ளது.

அடி மட்டங்களில் இருந்துதான் மாற்றங்கள் நிகழ வேண்டும். அவ்வாறான மாற்றங்கள்தான் உறுதியானவை, நிலையானவை.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை அதற்காக ஏன் நாம் பயன்படுத்தக் கூடாது?!

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (29 செப்டம்பர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்