தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு

🕔 October 1, 2015
Drugs - 05
– அஸ்ரப் ஏ. சமத் –

மிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர வெளிப்படுத்தினார். தமிழ் மற்றும் முஸ்லிம்  சிறுவா்கள் 100 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, குறித்த சிறுவர்கள் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

சிறுவா் தினத்தினை முன்னிட்டு, மதுசார  பாவனை மற்றும்  போதைப்பொருள் தகவல் நிலையத்தினர் நேற்று புதன்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே, புபுது சுமனசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“கடந்த 03 மாதங்களுக்குள் இலங்கையில் வெளியிடப்பட்ட 18  இந்திய தமிழ்த் திரைப்படங்களுள் 17 திரைப்படங்கள், 144.24 நிமிடத்தினை சிகரட் மற்றும் மதுசார   வகைகளை விளம்பரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக,  ‘மாரி’  எனும் திரைப்படம்தான் சிகரட்டை அதிகளவு விளம்பரப்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் மதுசாரம் மற்றும் சிகரட் பாவிக்கும் காட்சிகள் மொத்தமாக 21.97 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும், 18.22 நிமிடங்கள் சிகரட் புகைக்கும் காட்சிகளாக வந்துள்ளன. நடிகர் தனுஷ்  – இந்த படத்தில் நடித்திருந்தார். இது லாபத்தை ஈட்டிய திரைப்படமாகும்.

சிகரட் புகைப்பதனால், ஒரு வருடத்திற்கு இலங்கையில் 2000 பேர் இறக்கின்றனர்.  பாடசாலை மாணவா்கள் மத்தியில்  சிகரட் மற்றும் மதுசாரம் தொடா்பிலான சாதகமனநிலைகளை குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்கள் மறைமுகமாக விளம்பரப்படுத்துகின்றன.

உதாரணமாக, யாழ் மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டில்  36 வீதமானோர் மதுபானம் பாவிப்போராகவும், சிகரட் புகைப்பவர்கள் 40 வீதமாகவும் இருந்தனர்.

போதைப் பாவனையானது  சிகரெட்டில்தான் ஆரம்பிக்கிறது. ஏனைய போதைப் பொருட்கள்  பாவிப்போரில் நூறு வீதமானோர் தமது போதைப் பழக்கத்தினை சிகரட்டில் இருந்தே ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே, ஊடகவியலாளா்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. போதைப் பொருட்களுக்கு  எதிராக தங்களது பேனாக்களைப் பாவிக்க வேண்டும். சிறுவா்களை மிக இலகுவாக கவர்வன திரைப்படங்கள்தான். நடிகர் புகைப்பதைப் பார்த்து ரசிக்கும் சிறுவர்கள் அதனைப் போன்று புகைக்க ஆரம்பிப்பர். எனவே, இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.Drugs - 02Drugs - 04Drugs - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்