மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
– க. கிஷாந்தன் –
டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து, தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கெலனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டத்தில் 09ம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கும் நீரினை மறித்து, டிக்கோயா பிலிங்போனி பகுதியில் இயங்கி வரும் ஹேலிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு நீரினை கொண்டு செல்லும் வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டு வருகின்றது.
குறித்த திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சாஞ்சிமலை டிலரி சந்தியிலிருந்து பிலிங்போனி சந்தி வரை மக்கள் – ஆர்ப்பாட்ட பேரணியாக சென்றனர். அங்கு பிலிங்போனி பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தனர்.
09ம் இலக்க தேயிலை மலையில் இருந்து ஊற்றெடுத்து செல்லும் நீரினை மறித்து டிக்கோயா தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுகின்றமையால், டிக்கோயா சாஞ்சிமலை கிழ்பிரிவு, மேல்பிரிவு, நோர்வூட் பொயிஸ்டன், பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 5000கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குடி நீர் – குறித்த தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு சென்றால், லெச்சுமிதோட்டம், பொயிஸ்டன், சாஞ்சிமலை பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் நீரின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“எங்கள் தோட்டபகுதியில் ஊற்றெடுக்கின்ற நீரினை மறித்து, இது போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம்”என பொதுமக்கள் பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்ததையினை மேற்கொண்ட போதிலும், அதற்கான இணக்கபாடு எதுவும் எட்டபடவில்லைவில்லை.
“எங்கள் தோட்டத்தில் உள்ள நீரினை வேறு ஒரு தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல ஒரு போதும் எங்களால் அனுமதிக்க முடியாது” என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.