இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது
🕔 March 10, 2019
– றிசாத் ஏ காதர் –
சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் – அறுகம்பே பசுபிக் சுற்றுலா விடுதியில் மகளிர் தின விழா, நேற்று சனிக்கிழமை மிகப் பிரமாண்டமாக முறையில் நடைபெற்றது.
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தவிசாளர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க கலந்து கொண்டதோடு, பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.எம். நசீல், பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோருடன் திருக்கேவில், லகுகல பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முக்கியமான துறைகளில் தங்களை அர்ப்பணித்து செயற்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்ட இநிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுளும் மேடையேற்றப்பட்டன.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் துணிச்சலோடும், வெற்றிகரமாகவும் தத்தம் துறைகளில் செயற்பட்டு வரும் பெண்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக முப்படை, பொலிஸ் சேவை, ஊடகத்துறை, சமூக சேவை, வியாபாரம், கலை மற்றும் கலாசாரத்துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள், இவ்விழாவில் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள முப்படையின் உயர் அதிகாரிகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகளும் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம் மகளிர் தின நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார ஆகியோர் அனுப்பி வைத்திருந்த ஆசிச் செய்திகளும், இதன்போது வாசிக்கப்பட்டன.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் மகளிர் அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து, அவற்றின் பணிகளை வெற்றிகரமாக தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும், அரச உயர் பதவிகளிலுள்ள ஆண் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இதன்போது கொளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.